தற்சமயம் திருக்கோயில் அமைந்துள்ள இடமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடந்த ஆறு நூறு ஆண்டுகட்கு முன்பு கள்ளிச் செடிகள் மரம் செடி கொடிகள் முட்புதர்களடங்கிய வனமாகக் காட்சியளித்தது. இக்காட்டினை தங்கள் கடும் முயற்சியால் திருத்தி கழனியாக்கி விவசாயம் செய்து வந்தனர் இப்பகுதி மக்கள். அவர்களில் ஆந்தை குலப்பெரியவர் பழனிக்கவுண்டரும் மாடகுலப் பெரியவர் செல்லப்ப கவுண்டரும் தனஞ்செய குலப்பெரியவர் சேலம் சின்னமலைக் கவுண்டரும் தேவணகவுண்டரும் குறிப்பிடத் தக்கவராய் திகழ்ந்தனர். இவர்களில் ஆந்தை குலம் சார்ந்த நல்லணகவுண்டர் குமாரர் முதலிகவுண்டர் தன் பண்ணையில் மாடு மேய்க்கும் பணிக்காக சந்தான நாடார் என்பவரை நியமித்திருந்தார். பணியிலமர்த்தப்பட்ட நாடார் மாடுகளை மேய்ப்பதிலும் பின் பண்ணைக்கு ஓட்டி வந்து பராமரிப்பதிலும் கண்ணும் கருத்துமாய் இருந்து கடமையாற்றி வந்தார்....தற்சமயம் திருக்கோயில் அமைந்துள்ள இடமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடந்த ஆறு நூறு ஆண்டுகட்கு முன்பு கள்ளிச் செடிகள் மரம் செடி கொடிகள் முட்புதர்களடங்கிய வனமாகக் காட்சியளித்தது. இக்காட்டினை தங்கள் கடும் முயற்சியால் திருத்தி கழனியாக்கி விவசாயம் செய்து வந்தனர் இப்பகுதி மக்கள். அவர்களில் ஆந்தை குலப்பெரியவர் பழனிக்கவுண்டரும் மாடகுலப் பெரியவர் செல்லப்ப கவுண்டரும் தனஞ்செய குலப்பெரியவர் சேலம் சின்னமலைக் கவுண்டரும் தேவணகவுண்டரும் குறிப்பிடத் தக்கவராய் திகழ்ந்தனர். இவர்களில் ஆந்தை குலம் சார்ந்த நல்லணகவுண்டர் குமாரர் முதலிகவுண்டர் தன் பண்ணையில் மாடு மேய்க்கும் பணிக்காக சந்தான நாடார் என்பவரை நியமித்திருந்தார். பணியிலமர்த்தப்பட்ட நாடார் மாடுகளை மேய்ப்பதிலும் பின் பண்ணைக்கு ஓட்டி வந்து பராமரிப்பதிலும் கண்ணும் கருத்துமாய் இருந்து கடமையாற்றி வந்தார். நல்லவர்களையே சோதித்து நாடகமாடும் இறைவன் நாடார் வாழ்கையிலும் விளையாடத்துவங்கினான். ஆம் அவர் மேய்த்து வந்த பசு ஒன்றின் மடியில் பால் இல்லாததைக் கண்டு சந்தான நாடார் மீது சந்தேகம் கொண்டார் முதலிக்கவுண்டர். முன் ஒருபோதும் ஐயப்படாத முதலிக்கவுண்டர் திடீரென ஐயம் கொள்ளும் அளவிற்கு நடந்துவிட்ட தீயசெயலுக்கு காரணம் யாதோ என எண்ணி வருத்தப்பட்டார் சந்தான நாடார். இரண்டாம் நாளும் இதே நிலை. சந்தேகம் வலுத்தது. சந்தானத்தின் வருத்தமும் கவலையும் மிகுந்தன. ஒருமுறை நடந்த தவறு மறுமுறையும் நிகழ்ந்து விடக்கூடாதென்று எண்ணி அந்த ஒரு மாட்டின் மீதே கண்ணாயிருந்து மறைந்து நின்று கவனித்து வந்தார்.. உச்சிப்பொழுதில் ஓர் நாள் .... கண்காணிக்கப்பட்ட அப்பசு அவசர அவசரமாக கள்ளிச்செடிகள் மிகுந்துள்ள ஓரிடத்தில் கருக்கட்டான் மரத்தடியிலிருந்து புற்றின் அருகே சென்று தன் பின்னங்கால்களை விரித்து நின்றது. மடியிலிருந்து தானாகப் பால் சுரந்து புற்றின் மீது பொழியத்துவங்கிய மெய் சிலிர்க்கும் சம்பவத்தை கண்ணுற்றார் சந்தான நாடார். கன்றுக்கும் உதவாது கலத்திலும் படாது வீணாக மண்புற்றில் சொரிந்ததைக் கண்டு மனதில் ஐயம் கொண்டார். இதில் அற்புதம் இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டார். தன் மீது விழுந்த பழிச் சொல்லுக்கும் காரணம் கண்டு கொண்டார். சந்தேகக் கறை படிந்த சந்தான நாடார் சந்தோச மிகுதியால் ஓடோடிச் சென்று முதலிக்கவுண்டரிடமும் முகமலர நடந்த சம்பத்தை ஆனந்தக் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார். அதிசயிக்கத்தக்க நிகழ்ச்சியினைக் கண்ணுற அடுத்த நாள் முதலிக்கவுண்டரும் வனத்திற்குச் சென்று மறைந்து நின்று பார்க்கவே வழக்கம் போல பசுவும் புற்றருகில் சென்று பாலைச் சொரிய பச்சைக் குழந்தை முகம் கொண்ட பாம்பு உருவம் ஒன்று புற்றிலிருந்து வெளிவந்து பாலருந்தும் காட்சியைக் கண்டு பரவசமுற்று சிலிர்த்தார். பால் குடித்த குழந்தை குமரக் கடவுள் போலவும் பால முருகன் போலவும் காட்சி தந்ததால் குமாரா வீரக்குமாரா என்று மெய்சிலிர்க்கக் கூவினார். தன் வாழ்கையில் காணக்கிடைத்தற்கரிய இப்பேற்றினைப் பெற்ற முதலிகவுண்டர் இந்த ஆனந்தக் காட்சியினை ஏனையோரும் கண்டின்பெற வேண்டுமெனக் கருதி சந்தான நாடார் மூலம் சகலருக்கும் அறிவித்தார். அனைவரும் வந்து நின்று அற்புதக் காட்சியைக் கண்டு ஆண்டவனை எழுந்தருளச் செய்ய முடிவெடுத்தார். இலுப்பைகிணறு தனஞ்செய குலப் பெரியவர் பூசாரி சின்னமலைக்கவுண்டருக்கு அருள் ஏற்பட்டு தமிழகத்தில் வாழ்ந்த பதினெட்டு சித்தர்களின் விருப்பப்படி கொங்கு நாட்டில் குறிப்பாக காங்கேய நாட்டில் மூன்று குமரர்கள் தோன்றினர். அவர்களில் ஒருவரான வீரக்குமாரரே இங்கு வந்து தோன்றியுள்ளார். சுவாமி தோன்றிய இப்பகுதி பெரியவர்கள் ஒன்று கூடி வனத்தைச் சுத்தம் செய்து திருக்கோயில் அமைத்து திருப்பணி செய்வித்து முதன்மைவாக்கில் பொறுப்பை ஏற்று பரிபாலனம் செய்து வந்தார்கள். திருக்கோயிலுக்கு முதன்மைகள் இருந்துள்ளது. இதுகாறும் கண்ட செய்திகள் வாழையடி வாழையென வாய் மொழியாகக் கேட்ட செவிவழிச் செய்திகளே இவையன்றி ஏடுகள் வாயிலாக இடம் பெற்ற ஆதாரப் பூர்வச் சான்றுகளேதும் இல்லையெனவும் அறிய முடிகிறது.