தல வரலாறு
அருள்மிகு வண்டுசேர் குழலி சமேத பாம்புரநாதர் திருக்கோயில் (இராகு கேது ஸ்தலம்) திருப்பாம்புரம் ( தென்காளஹஸ்தி) ( தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ) சிவராத்திரியும் , திருப்பாம்புரமும் முன்னொரு காலத்தில் ஆதிசேஷன் பெற்ற சாபத்தால் உடல் நலிவுற்று ஈசனை தொழுதபோது அவர் மகா சிவராத்திரி அன்று முதல் காலத்தில் திருக்குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்தில் திருநாகேஸ்வரரையும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் திருபாம்புரேஸ்வரரையும், நான்காம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிப்பட்டு சாபம் நீங்க பெற்றார் என்பது புராண வரலாறு. சிறப்பு அம்சங்கள் இராகுவும்...அருள்மிகு வண்டுசேர் குழலி சமேத பாம்புரநாதர் திருக்கோயில் (இராகு கேது ஸ்தலம்) திருப்பாம்புரம் ( தென்காளஹஸ்தி) ( தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ) சிவராத்திரியும் , திருப்பாம்புரமும் முன்னொரு காலத்தில் ஆதிசேஷன் பெற்ற சாபத்தால் உடல் நலிவுற்று ஈசனை தொழுதபோது அவர் மகா சிவராத்திரி அன்று முதல் காலத்தில் திருக்குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்தில் திருநாகேஸ்வரரையும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் திருபாம்புரேஸ்வரரையும், நான்காம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிப்பட்டு சாபம் நீங்க பெற்றார் என்பது புராண வரலாறு. சிறப்பு அம்சங்கள் இராகுவும் - கேதுவும் ஏகசரீரமாய் ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்க பெற்றனர். இத்தலத்தில் ஆதிசேஷன் , அனந்தன் , வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலகன், குளிகன், பத்மன், மகாபத்மன், கால கண்டேஷன் பெயருடைய நாகங்கள் அகலிகை மற்றும் சுனிதன் போன்ற வடநாட்டு அரசர்களும் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றுள்ளார்கள் என்பது புராண வரலாறு. இத்திருக்கோயிலில் இராகு - கேது பகவான் சிறப்புகள் இராகு - கேது பகவான் ஏகசரீரமாகி, ஈசனை (பாம்புரநாதரை) நெஞ்சில் நிறுத்தி இராகுவும் - கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு. ஆதலின் இத்தலத்தில் உள்ள ஈசனையும் (பாம்புரநாதரை) அம்மையையும் இராகு -கேதுவையும் வணங்குவோர்க்கும் பாவங்கள் நீங்கப்பெறுகின்றன. நினைத்த காரியம் கைகூடுகிறது இத்தனை சிறப்புக்கும் காரணமாக இராகுவும் -கேதுவும் திருக்கோயில் ஈசான்ய மூலையில் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். இராகு காலங்களில் இச்சன்னதியின் அபிஷேகம் , அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் விலகி நலம் பெறுகின்றனர். ஜோதிட செய்திகள் ஏனைய திருக்கோயில்களில் இருப்பதைப்போல இராகுவும் - கேதுவும் தனியாக இராமல் இருவரும் ஏக சரீரமாக இருந்து வருவது இத்தலத்திற்கு இன்னொரு சிறப்பு. 1.ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால் 2.18 வருட இராகு தசா நடந்தால் 3.7 வருட கேது தசா நடந்தால் 4.லக்னத்திற்கு 2-ல் இராகுவோ, கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8-ல் கேதுவோ, இராகுவோ இருந்தால் 5.இராகு புத்தி, கேது புத்தி , நடந்தால் 6.களத்திர தோஷம் இருந்தால் 7.புத்திரதோஷம் இருந்தால் 8.ஆண்,பெண்,இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால் 9.கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் 10.தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால் 11. கடன் தொல்லை இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம். இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமி அம்பாள் மற்றும் ஏக சரீர இராகு,கேது, பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். இராகு- கேதுவுக்கு நீலம் மற்றும் பலவண்ண ஆடையை சாற்றவேண்டும். இயன்றால் கோமேதகம் மற்றும் வைடூரியம் அணிவிக்கவேண்டும். சங்கு புஷ்பம் ,மல்லிகை, நீல மாந்தாரை, இலுப்பைப்பூ, செவ்வரளி , நாகலிங்கப்பூ - ஆகியவை இராகு -கேது பகவானுக்கு பிடித்தவை. அர்ச்சனை முடிந்தபின் உளுத்தும் பருப்புப் பொடி மற்றும் கொள்ளுப்பொடி அன்னம் நிவேதனம் செய்து தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் முன் குறிப்பிட்ட துன்பங்கள் விலகுகின்றன. ஆதிசேஷன் பூஜை வரலாறு வாயுபகவானுக்கு ஆதிசேஷனுக்கும் இடையில் தம்மில் யார் வலியவன் என்ற போட்டி ஏற்பட்டு வாயுபகவான் மலைகளையெல்லாம் தம் வலிமையால் புரட்டி வீச முற்பட ஆதிசேஷன் மலைகளை பெயர்க்காவண்ணம் தனது வலிமையால் காத்து நிற்க பெரும்போர் மூண்டது. இருவரும் சமபலம் காட்சி நின்றதால் வெற்றியடைய முடியாத வாயுபகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராண வாயுவை நிறுத்திவிட உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் உள்ளிட்ட தேவர்களின் வேண்டுகோளின் பேரில் ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நிற்க வாயுபகவான் வெற்றிகளிப்புடன் மலைகளை புரட்டி வீசினான்.அதனால் கோபமுற்ற ஈசன் வாயுபகவானையும், ஆதிசேஷனையும் பேயுருவாகச் சபித்தார். இருவரும் தம் குற்றம் உணர்ந்து வணங்கித் தம்மை பொருத்தருளவேண்ட வாயுபகவான் வைகை நதிக்கு வடக்கிலும் மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்து விமோசனம் பெறலாம் எனவும் , ஆதிசேஷன் பாம்புரத்தில் தம்மை 12 ஆண்டுகள் பூஜை செய்து விமோசனம் பெறலாம் என்றும் அருளியதன்பேரில் ஆதிசேஷன் இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு விமோசனம் பெறலாம் என்றும் அருளியதன்பேரில் ஆதிசேஷன் இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு விமோசனம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. ஒருமுறை விநாயகர் இறைவனை தொழுதபோது சிவபெருமான் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தம்மையும் தொழுவதாக எண்ணி கர்வம் கொண்டது. அதனால் சினமுற்ற இறைவன் நாக இனம் முழுவதும் தம் சக்தியனைத்தும் இழக்க சாபமிட்டார். பின்னர் அஷ்ட மகா நாகங்களும் இராகுவும் - கேதுவும் ஈசனை தொழுது தங்கள் பிழையை போக்குமாறு வேண்ட இவர்கள் அனைவரும் சிவராத்திரியில் தம்மைப் பூசித்து விமோசனம் பெற அருளினார். அவ்வாறே மகாசிவராத்திரி மூன்றாம் சாமத்தில் இராகுவும் - கேதுவும் அஷ்டமகா நாகங்களும் திருப்பாம்புர நாதனை வணங்கிச் சாப விமோசனம் பெற்றனர். உலகைத் தாங்கும் ஆதிசேடன் அதன் சுமையால் உடல் நலிவுற்று வருந்தியபோது ஈசனின் ஆணைப்படி சிவராத்திரி இரவு முதல் காலம் குடந்தை நாகேஸ்வரரையும் , இரண்டாம் காலம் திருநாகேஸ்வரம் நாகநாதரையும் வழிபட்டு மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாகவும் அதனால் இவ்வூரில் உள்ள பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதாகவும் , யாரையும் தீண்டுவதில்லை எனவும் புராண வரலாறு கூறுகிறது. கோச்செங்கணான் பூஜை செய்த வரலாறு சோழ மன்னனான கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் வெய்த வினையால் வெண்குட்டம் எனும் நோய் பிடித்து உடலெங்கும் வெண்ணிறமாகி உடல் தளர்ந்தான். வசிட்டனை பூசித்து தமது நோய் தீரும் வழி சொல்ல வேண்டினான் சோழன் வசிட்டனின் கூற்றுப்படி பாம்புரம் வந்து தீர்த்தத்தில் மூழ்கி ஆலயத்தில் ஈசனை வணங்கிப் பூஜை செய்ய அவன் குட்டம் நீங்கியதாக தல புராணம் கூறுகிறது. இதனால் மகிழ்வுற்ற கோச்செங்கட் சோழன் மூன்று ஆண்டுகள் இங்கு தங்கி கோயில் திருப்பணிகள், உயர்ந்த கோபுரங்கள், மண்டபங்கள் படித்துறைகள், நந்தவனம் , தோட்டம் , சோலைகள், கோயில் வீதி என பற்பல நற்பணிகள் செய்தான். ஆலயத்தில் சதாசிவனை பிரதிஷ்டை செய்து சிறப்பான சிவகங்கை தீர்த்தம் உண்டாக்கி சிலந்திசோழபுரம் என ஊருக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தான். செவிவழிச் செய்திகள் கருவறையில் நாகம் வந்து வணங்குவதாகவும் குறிப்பாக ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புண்ணியம் செய்தோர் நாக வழிபாட்டைக் கண்கூடாக் காணலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கோவிலுக்கு நாக நடமாட்டம் ஏற்படும்போது திடீர் மல்லிகை, தாழாம்பூ , ஆகிய பூக்களின் நறுமணம் வீசுகிறது. இவ்வூரில் இருக்கும் பாம்புகள் இறையடியராக உலவிக்கொண்டிருப்பதால் இன்றுவரை அவை யாரையும் தீண்டியதில்லை. அத்தி பூப்பதில்லை ஆலம் விழுது தரை தொடுவதில்லை என்பதெல்லாம் வியப்பூட்டும் செய்திகள் . சுவாமி திருமேனியில் நல்லபாம்பு மாலை இவ்வாலய மூலவரின் திருமேனியில் நல்லபாம்பு மாலையாக கிடந்துள்ளது. கடந்த 2002-ம் வருடம் மார்ச் மாதம் 21-ஆம் நாள் காலை அம்பாள் சன்னதிக்குச் சிவாச்சாரியார் பூசை செய்யச்சென்றபோது ஏழரை அடி நீளமுள்ள பாம்பு தனது சட்டையை அம்பாள் மீது திருமாலையாக அணிவித்திருந்ததைக் கண்டார். அந்த சட்டையை நினைவுச்சின்னமாக பிரேம் செய்து சுவாமி சன்னதியில் வைத்துள்ளனர். இந்நிலையில் (26.05.2002) காலை சுவாமிக்கு பூசை செய்ய சிவாச்சாரியார் உள்ளே சென்றபோது எட்டடி நீளமுள்ள நல்லபாம்பு சுவாமி திருமேனியில் சுற்றியிருந்தது. அர்ச்சகர் உள்ளே சென்றபோது நாகம் வெளியில் சென்றுவிட்டது. ஆனால் அதன் தோல் (சட்டை) சுவாமியைச் சுற்றி மாலை அணிவித்தது போல் இருந்தது. எண்ணற்ற பக்தர்கள் அந்த அற்புதக் காட்சியைத் தரிசித்தனர். ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி நாளில் சிவலிங்கத்தின் மீது நல்லபாம்பு சட்டை காணப்பட்டது சிறப்பம்சமாகும். முக்கிய திருவிழாக்கள் 1.இராகு - கேது பெயர்ச்சி விழா 2.மகாசிவராத்திரி விழா திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரவு தங்கி பரிகார அபிஷேகங்கள் செய்வதற்கு நவீன குளியலறை மற்றும் கழிவறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளது. ஸ்தலம் அமைவிடம் இவ்வாலயத்திற்கு வருவோர் கும்பகோணத்தில் இருந்து கொல்லுமாங்குடி வழியாகக் காரைக்கால் செல்லும் பேருந்தின் மூலம் கற்கத்தியை அடைந்து அங்கிருந்து திருக்கோயிலுக்கு வரலாம். அல்லது கொல்லுமாங்குடி / பேரளம் சென்று மினிபேருந்து மூலம் இவ்வாலயம் வரலாம். மயிலாடுதுறை அல்லது திருவாரூரிலிருந்து இவ்வாலயம் வர கொல்லுமாங்குடி / பேரளம் சிறந்த இடமாகும். மேலும் திருநள்ளாறு மற்றும் திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இவ்வாலயம் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கதாகும்.