


தல பெருமை
அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில், கோபாலபுரம், குடியாத்தம், வேலூர் மாவட்டம். ...அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில், கோபாலபுரம், குடியாத்தம், வேலூர் மாவட்டம். திருக்கோயில் தலவரலாறு வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்த இந்நகரம் முதலில் குடியேற்ற நல்லூர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது. காலபோக்கில் குடியேற்றம் என்று அழைக்கப்பட்டு பேச்சு வழக்கில் குடியாத்தமாகி நிலைத்து நின்றுவிட்டது. இந்நகரில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கன்னடர்கள் குடியேறி தீப்பெட்டி தொழிலகங்களை உருவாக்கி உள்ளார்கள். கன்னடர்களின் வருகைக்கு பிறகு நகரம் பெருமளவில் வளர்ந்து தீப்பெட்டி உற்பத்தியில் மாநிலத்தில் முக்கிய இடமாக மாறியுள்ளது. கன்னட மக்கள் பெருமளவில் குடியேறியதால் குடியேற்றம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குடியாத்தத்தில் கோபாலபுரம் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. மூலவராக ஸ்ரீகெங்கையம்மனும், மூலவரை சுற்றி ஸ்ரீ பிராமி, ஸ்ரீதாட்சாயினி, ஸ்ரீவாராகி, ஸ்ரீதுர்கை சிலைகள் சிறு சன்னதிகளில் அழகுற எழுந்தருளுகின்றனர். கோயிலின் முன் வேப்பமரமும், பின்புறம் அரசமரமும் அமைந்துள்ளதால் சக்தியும் சிவனும் கோயில் கொண்டு அருள்பாலிப்பதாக உள்ளது. வெள்ளி கவசம் அணிந்து சிம்ம பீடத்தின் மீது அம்மன் சாந்த சொருபமாக காட்சியளிக்கின்றார். மூலவர் மண்டபத்தை அடுத்து அம்மன் சிரசு மண்டபம் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. சித்திரை மாதத்தின் கடைசி நாளில் தேர்த்திருவிழாவும், வைகாசி முதல் தேதி அம்மன் சிரசு ஊர்வலமும் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது. காப்பு கட்டும் திருவிழா அன்று அனைத்து கிராம ஊழியர்களையும் கௌரவித்து கோயில் நிர்வாகம் முதல் மரியாதை அளித்தும், திருவிழா முடியும் வரை அவர்கள் தாங்களே கோயிலைத் தத்தெடுத்து பணியினை மேற்கொள்வது சிறப்பான ஒன்றாகும். அம்மன் சிரசு திருவிழா வரலாறு விதர்ப்ப தேசத்தை ஆண்ட மன்னன் இரைவத மகாராஜன் குழந்தை பாக்கியம் இல்லாததால் கடும் தவம் மேற்கொண்டு பிரம்மதேவனை பூஜிக்கின்றார். பிரம்மதேவன் கொடுத்த வரப்படி ரேணுகாதேவியை மகளாக பெறுகின்றார். வளர்ந்து அழகு தெய்வமாக காட்சி தரும் ரேணுகாதேவி (கெங்கையம்மன்) ஜமத்கனி என்ற முனிவருக்கு திருமணம் செய்து தருகின்றனர். இவர்களுக்கு விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் உட்பட நான்கு குழந்தைகள் பிறக்கின்றன. நாள்தோறும் ரேணுகாதேவி தாமரை குளத்தில் நீராடிவிட்டு தன் கற்பு நெறியால் மண்ணில் குடம் செய்து தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அப்படி ஒருநாள் மண் குடத்தில் தண்ணீர் எடுக்க தாமரை குளத்தை நோக்கிய வேளையில் தேவர் குலத்தை சேர்ந்த கந்தர்வர் சாயலை கண்டு வியந்து நிற்கின்றார். வியந்து நின்ற மாத்திரமே கற்பு நெறி களங்கப்பட்டு மண்குடம் கரைந்து மீண்டும் மண்ணாகி போகிறது. கடும் தவத்தில் இறைவனை நெஞ்சில் நிறுத்தி வணங்கி வழிப்பட்டு வந்த ஜமத்கனி முனிவர் ஞானத்தால் ரேணுகாதேவி கந்தர்வன் அழகில் மயங்கி கற்பு நெறி பிறழ்ந்ததை உணர்ந்து தன் மகன்கள் நால்வரை அழைத்து உன் தாயின் தலையை வெட்டி விடுங்கள் என கட்டளையிடுகின்றார். தாயின் பாசம் மகன்களில் பரசுராமனை தவிர மற்ற மூவரை தள்ளாட வைக்கின்றது. தாயின் தலையை வெட்ட மறுத்து மூவரும் தந்தையின் கட்டளையை உதறித் தள்ளுகின்றனர். பரசுராமன் தந்தையின் கட்டளையை தலைமேல் தாங்கி வெள்ளமென உடைந்து பெருகும் கண்ணீருடன் எறிந்துவிட்டு ரேணுகாதேவி தலையை வெட்டி வருகின்றான். மகன் தன்னை வெட்ட வரும் தகவல் அறிந்து உயிரை காத்து கொள்ளும் பொருட்டு ஓடுகின்றாள். ஓடிவரும் வழியில் பறை சாற்றுபவர் வீட்டில் தஞ்சம் புகுகின்றாள். அங்கும் பரசுராமன் பாசத்தை தூக்கிக்கொண்டு எறிந்துவிட்டு ஆக்ரோஷமாக வருவதை கண்டு அங்கிருந்து சென்று சலவை தொழிலாளி வீட்டில் அடைகலமாகின்றாள். தந்தை கட்டளையை நிறைவேற்றும் ஆவேசத்துடன் மகன் வருவதை கண்டு ஓடும் ரேணுகாதேவி உடல் எங்கும் கொப்புளங்கள் பூக்க மீனவர் வீட்டில் கண்ணீரும் கம்பலையுமாக மறைந்து கிடக்க அங்கு வந்த பரசுராமன் தாயின் தலையை வெட்டுகின்றான். மகனால் வெட்டப்பட்டு உடல் வேறு தலை வேறாக விழ உயிர் துறக்கின்றாள். தாயின் தலையை வெட்டிய கையோடு ஆறாக பெருகும் கண்ணீருடன் தந்தை முன் நின்ற பரசுராமனிடம் ஜமத்கனி முனிவர் தந்தை கட்டளையை நிறைவேற்றிய நீ என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என்கின்றார். மீண்டும் தாயை உயிர்பிக்க செய்யும் வரத்தை பரசுராமன் தந்தையிடம் கேட்க ஜமத்கனி முனிவர் கொடுத்த வாக்குபடி வரம் தர, தந்தை தந்த மந்திர நீரை எடுத்து கொண்டு தாயை வெட்டி வீழ்த்திய இடத்தில் வந்து நிற்கின்றார். தாயை மற்றொரு உடலுடன் தவறுதலாக பொருத்தி மந்திர நீரை தெளித்து உயிர் பிழைக்க வைக்கிறான். ஆனந்த கண்ணீருடன் உயிர் பெற்ற தாயை வணங்கி நிற்கின்றான் பரசுராமன். கற்புநெறி, தந்தை சொல் மந்திரம் ஆகியவற்றை அழுத்தி போதிக்கும் இப்புராணப்படி இக்கோயில் வைகாசி திருவிழா நடத்தப்படுகிறது.
