தல வரலாறு
இத்திருத்தலத்தில் ஒரே விமானத்தில் கிழக்கு முகம் நோக்கி கைலாசநாதரும், தெற்கு முகம் நோக்கி தட்சிணாமூர்த்தியும் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இது தமிழகத்தில் எந்த ஒரு திருக்கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இத்திருத்தலத்தில் தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழ் இருக்கும் முயலகன் தலை இடப்பக்கம் அமைந்திருக்கும். தட்சிணாமூர்த்தி நெற்றிக்கண்ணோடு வீற்றிருப்பது சிறப்பாகும். ஆதிசங்கரர் குருபகவானை வழிபாடு செய்தார் என்பது தனிச்சிறப்பாகும். இத்திருத்தலத்தில் கோவிந்தராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தட்சிணாமூர்த்தியை வழிபட்டதால் இத்தலத்திற்கு கோவிந்தர்பாடி அகரம் என பெயர் பெற்றது. காலப்போக்கில் கோவிந்தவாடி என மாற்றப்பட்டது. இங்கு கோவிந்தராஜ பெருமாள் தம்பதி சமேதராய் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.