தல பெருமை
பூலோகத்தின் புண்ணிய பூமியாக கருதப்படும் பாரத தேசத்தில் விநாயகரின் ஸ்தலங்களாக புராணங்களின் வாயிலாக கூறப்படுவது பத்து ஸ்தலங்களாகும். அவை 1.சுவேத விக்னேஸ்வரபுரம் திருவலஞ்சுழி 2.மயூரேசபுரம் 3.ராஜசதனம் 4.கண்டகீபுரம் 5.சித்தாஸ்ரமம் 6.பௌமபுரம் 7.மணிபுரம் 8.காசி 9.சிந்தாமணிபுரம் 10.பிரயாகை எனப்படும். அவற்றுள் திருவலஞ்சுழியை தவிர மற்ற ஒன்பது ஸ்தலங்களும் வட இந்தியாவிலுள்ள மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம் போன்ற மாகானங்களிலே அமைந்துள்ளது. மேற்படி பத்து ஸ்தலங்களுக்குள் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயில் சுவேத விக்னேஸ்வரபுரம் என்னும் திருவலஞ்சுழி ஒன்று மட்டும் தென் இந்தியாவில் உள்ள தமிழகத்தில் உள்ளது. மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிராகவும் கொண்டு தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலில் அமுதம் கடையும்பொழுது மந்திர மலையின் பாரம் தாங்காது வாசுகி தனது கொடிய விஷத்தை பார்க்கடலில் கக்கியது. அந்த விஷமானது ஆலகால விஷமாக மாறியது....பூலோகத்தின் புண்ணிய பூமியாக கருதப்படும் பாரத தேசத்தில் விநாயகரின் ஸ்தலங்களாக புராணங்களின் வாயிலாக கூறப்படுவது பத்து ஸ்தலங்களாகும். அவை 1.சுவேத விக்னேஸ்வரபுரம் திருவலஞ்சுழி 2.மயூரேசபுரம் 3.ராஜசதனம் 4.கண்டகீபுரம் 5.சித்தாஸ்ரமம் 6.பௌமபுரம் 7.மணிபுரம் 8.காசி 9.சிந்தாமணிபுரம் 10.பிரயாகை எனப்படும். அவற்றுள் திருவலஞ்சுழியை தவிர மற்ற ஒன்பது ஸ்தலங்களும் வட இந்தியாவிலுள்ள மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம் போன்ற மாகானங்களிலே அமைந்துள்ளது. மேற்படி பத்து ஸ்தலங்களுக்குள் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயில் சுவேத விக்னேஸ்வரபுரம் என்னும் திருவலஞ்சுழி ஒன்று மட்டும் தென் இந்தியாவில் உள்ள தமிழகத்தில் உள்ளது. மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிராகவும் கொண்டு தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலில் அமுதம் கடையும்பொழுது மந்திர மலையின் பாரம் தாங்காது வாசுகி தனது கொடிய விஷத்தை பார்க்கடலில் கக்கியது. அந்த விஷமானது ஆலகால விஷமாக மாறியது. அவ்விஷம் கொடிய வெப்பமாகமாறி உலகெங்கும் உள்ள ஜீவராசிகளை துன்புறுத்தியது. மேற்படி துன்பம் தாளாது தேவர்கள், அசுரர்கள் மற்ற ஜீவராசிகள் அனைவரும் ஒன்றுகூடி கயிலைமலையை அடைந்து ஈசனிடம் முறையிட்டு வேண்டினர். எந்த ஒரு காரியம் செய்ய முற்பட்டபொழுதிலும் முன்னதாக விநாயகபெருமானை வழிபட்டு விக்னங்கள் யாவும் நீங்கப்பட்டு அருள்பெற்ற பின்னரே அமுதம் பெற முயற்சித்திருக்க வேண்டும். எனவே நீங்கள் பார்க்கடலை அடைந்து அங்கு ஸ்ரீ விநாயகப் பெருமானின் திருஉருவை எமது ஆனந்தமய கருணையின் வண்ணம் தோற்றுவித்து முறையாக வழிபட்டு அவ்விநாயகரின் பெரும் கருணையினால் அமுதம் கிடைக்கப்பட்டு மகிழ்வீர்களாக என திருவாய் மலர்ந்தருளினார். தேவர்களும், மற்றவர்களும் மனமகிழ்ந்து பரமேஸ்வரனை வணங்கி பார்க்கடல் கரையை அடைந்தனர். அங்கு முன்பு கடைந்து நஞ்சு கலந்த அமுதத்திலிருந்து ஆலகால விஷத்தை பிரித்து ஈசனால் உண்ணப்பட்டு எஞ்சியிருந்த சுத்த அமுதமயமான நுரைகளை ஒன்று திரட்டி சச்சிதானந்த மயமான லோககுருவாகிய ஸ்ரீ சர்வேஸ்வரனின் திருமேனி தோற்றத்தை மனதில் தியானித்து சகல நிஷ்கல பேதங்களை இணைத்து சச்சிதானந்த மார்கத்தில் சகலத்தை சத்தாகவும், நிஷ்கலத்தை சித்தாகவும் சகல நிஷ்களங்களை ஆனந்த மயமாகவும் கொண்டு சகல நிஷ்கல சச்சிதானந்த பரம்பொருளான ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமான் திரு உருவை சிருஷ்டி செய்து மஹாவிஷ்ணு பிரம்மாவுடன் இந்திராதி தேவர்களெல்லாம் அசுரர்களுடனும் கூடி மிகுந்த பக்தி சிரத்தையுடன் கணசாரம் எனப்படும் பச்சை கற்பூரத்துடன் பூஜைகள் செய்வித்து ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமான் பெரும் கருணையினாலே அமுதம் கிடைக்கப்பெற்று மகிழ்ந்தனர். மனிதர்களாகிய நாம் விநாயகர் பூஜையின் பொருட்டு பிள்ளையார் பிடித்தால் பூஜை முடிந்தவுடன் யதாஸ்தானம் செய்துவிடுவது வழக்கம். ஆனால் மேற்படி விநாயகரோ லோககுருவான சாக்ஷாது ஸ்ரீபரமேஸ்வரனின் கருணை கடலான ஞான மார்க்கத்தினால் சிருஷ்டிக்கப்பெற்று தேவர்களால் பூஜை செய்யப்பட்டமையால் இவ்விநாயகரை நிரந்தரமாக தாமே ஆன்மார்த்த மூர்த்தியாக வைத்து பூஜை செய்ய வேண்டுமென்று தேவர்களெல்லாம் கூடி வாதம் புரிய துவங்கி விட்டனர். வாதத்திற்கு தீர்வு காண கயிலை சென்று ஈசனை வணங்கி நின்றனர். ஈசனும் தேவர்களின் குறிப்பறிந்து ஸ்ரீசுவேத விநாயகப் பெருமானின் திரு உள்ளப்பாங்கை மனதில் கொண்டு ஆரம்பத்தில் திருக்கையிலையிலும் கல்பாந்த காலத்தில் பூலோகத்திலும் ஸ்ரீ சுவேத விநாயகர் நம்மால் ஆராதிக்கப்படுவார். இடைப்பட்ட யுகங்களில் உங்களின் முறையே யுகங்கள் வாரியாக வைத்து பூஜை செய்து நன்மைகள் பல அடைவீர்களாக என்று கூறி அருளினர். அதன்படி ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமான், ஸ்ரீ பார்வதிதேவியுடன் கூடி ஸ்ரீ பரமேஸ்வரனால் பலகாலம் திருக்கையிலாயத்தில் ஆராதிக்கப்பட்டு பின்பு கிருதயுகத்தில் லெட்சுமி தேவியுடன் கூடி மஹா விஷ்ணுவினால் வைகுண்டத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பிறகு திரேதாயுகத்தில் சரஸ்வதி தேவியுடன் கூடி பிரம்மாவினால் சத்ய லோகத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பின்பு துவாபர யுகத்தில் துருவ லோகம், தபோ லோகம், ஜணோலோகம், புவர் லோகம், சுவர் லோகம், சிம்சுமானஸ்தானம், நாகாத்திரி, பிர்மசைலம், பாரியாத்ரா, க்ரளவுசாத்திரி, பிரம்ம பவனம், நவக்கிரக மண்டலங்கள் முதலிய இடங்களில் பலகாலம் இருந்து அவரவர்களால் பூஜிக்கப்பட்டு வரங்கள் பல அருளிச்செய்து பிறகு கலியுகத்தில் இந்திர லோகமடைந்து இந்திராணி தேவியுடன் கூடி தேவேந்திரனால் பூஜைகள் செய்யப்பட்டு வந்தார். தேவேந்திரனுக்கு அகல்யையினுடைய சாப விமோசனத்தின் பொருட்டு சிவஸ்தலங்களில் க்ஷேத்திராடணங்கள் செய்ய நேரிட்டது. தனது ஆன்மார்ந்த பூஜா மூர்த்தியாகிய சுவேத விநாயகரை தங்க சம்புடத்தில் எழுந்தருளச் செய்து கையில் எடுத்துக்கொண்டு பூலோகத்தில் பல சிவஸ்தலங்கள் சென்று வழிபட்டு சக்தி வனம் எனப்படும் தக்ஷிணாவர்தம் திருவலஞ்சுழியை அடைந்து ஜடா தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ கபர்தீஸ்வர பெருமானை வழிபட முனைந்த சமயம் தனது ஆன்மார்த்த பூஜா பேடகத்தை பூமியில் வைக்கலாகாது என மஹாவிஷ்னுவினால் கூறியிருந்ததை எண்ணி யோசித்து இருக்கும் தருணத்தில் ஸ்ரீ கபர்தீசபெருமான் சிருஷ்டாசாரம் பொருந்திய அழகிய பிரம்மசரிய அந்தன சிறுவனாக இந்திரனின் முன்பு பலிபீடத்தின் அருகில் வந்து தோன்றினார். இந்திரன் மிகவும் சந்தோஷித்து ஸ்ரீ சுவேத விநாயகர் இருந்த தனது ஆன்மார்த்த பூஜா பேடகமாகிய தங்க சம்புடத்தை அந்த அந்தணச்சிறுவனின் கையில் கொடுத்து இந்த தங்கச் சம்புடத்தினுள் எனது ஆன்மார்த்த பூஜா மூர்த்தியாகிய மஹா வலம் பொருந்திய ஸ்ரீ சுவேத விநாயக மூர்த்தி இருக்கிறார். இதை பூமியில் வைக்கலாகாது என ஸ்ரீ மஹா விஷ்ணு எனக்கு ஆக்ஞா செய்துள்ளார். எனவே நான் இங்குள்ள ஜடா தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ கபர்தீச பெருமானை வழிபட்டு வந்து திரும்ப பெற்றுக் கொள்கிறேன். அதுவரை இப்பெட்டகத்தை பூமியில் வைக்காது நின் கையிலேயே வைத்துக்கொள்ளுமாறு கூறி கொடுத்தார். அந்தணச்சிறுவனும் ஒப்புக்கொண்டு ஒரு நிபந்தனையை இந்திரனிடம் கூறினார். ஹே தேவேந்திரா என நான் மூன்று முறை அழைப்பேன் அதற்குள் நீ வந்து உனது உடமையை பெற்றுக்கொள்ளாவிடில் சம்புடத்தை இந்த பலி பீடத்திலேயே வைத்து சென்றுவிடுவேன். இதற்கு சம்மதமா என கேட்டு இந்திரனின் ஒப்புதல் பெற்று சம்புடத்தை பெற்றுக் கொண்டார். இந்திரன் சந்தோஷமடைந்து ஜலக்கிரிடை செய்ய புறப்பட்டார். அந்தணச்சிறுவன் வேடம் கொண்ட கபர்தீசப் பெருமான் தான் முன்பு சொல்லியிருந்தபடி இந்திரனை மும்முறை அழைத்து ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமான் இருந்த தங்கச் சம்புடத்தை தனது பலிபீடத்தின் கீழ் திசையில் உள்ள மாடப்பிறையின் நடுவில் ஆனந்த பரவசத்தோடு ஸ்தாபித்து நிலை நிறுத்தி அருளிச் செய்து மறைந்தருளினார். இந்திரன் தனது நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்து ஸ்ரீ கபர்தீச பெருமானை வழிபட்டு திரும்ப வந்து தங்கச் சம்புடம் பலிபீடத்தினடியில் இருப்பதையும் அந்தணச் சிறுவன் காணாமல் சென்றதையும் கண்டு திகைத்து வருத்தமுற்று சம்புடத்தை கையில் எடுக்க முயற்சிக்கும் பொழுது சம்புடம் எடுக்க வராமையினால் வருத்தம் அடைந்து மீண்டும் பல உபாயங்கள் மேற்கொண்டும் சம்புடம் எடுக்க இயலாமல் போகவே இறுதியில் விஸ்வகர்மாவை கொண்டு விநாயகர் இருந்த இடத்தை சுற்றிலும் பலகனி முதலான கலைத்திறன் வாய்ந்த சிற்ப நுட்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இந்திர விமானமாக நிர்மானித்து ஐராவதம் முதலான ரத கஜதுரகாதிளைக் கொண்டு தனது இருப்பிடம் இட்டுச்செல்ல எத்தனித்தான். அது சமயம் ஆகாச வானியாக அசரீரி மூலம் ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமான் தோன்றி ஹே தேவேந்திரா நான் ஆதியில் திருக்கையிலையில் ஈசனால் பல காலம் ஆராதிக்கப்பட்டு பிறகு யுகங்கள் வாரியாக பல லோகங்களிலும் பல தேவர்களால் பூஜிக்கப்பட்டு இப்பொழுது பூலோகத்தில் தக்ஷிணாவர்த்தம் திருவலஞ்சுழி எனப்படும் இந்த சக்திவன திவ்ய க்ஷேத்திரத்தில் ஸ்ரீ கபர்தீச பெருமானால் இவ்விடத்தில் ஸ்தாபிக்கப்பட்டு கலியுகத்தில் பூலோக வாசிகளுக்கு வேண்டும் வரங்களை அருளிச் செய்ய சித்தம் கொண்டுள்ளோம். எனவே, நீ என்னை எடுத்துச் செல்லும் எண்ணத்தை கைவிட்டு பிரதி வருஷம் ஆவணி மாதம் சுக்கில பக்ஷம் சதுர்த்தி விநாயக சதுர்த்தி அன்று நீ இங்கு வந்து என்னை பூஜை செய்து வருஷம் முழுவதும் பூஜை செய்த பலனை அடைந்து இன்புறுவாயாக என திருவாய் மலர்ந்தருளி அகல்யை சாபத்திலிருந்தும் விடுவித்து அனுக்கிரகித்தார் இதை செவிமெடுத்த இந்திரன் எல்லையில்லா ஆனந்தமடைந்து வருடந்தோறும் ஆவணி மாதத்தில் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமானுக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு துவஜா ரோஹணம் முதலானவைகள் செய்வித்து பிரமோற்சவம் துவங்கி ரதோத்ஸவம் செய்வித்து வணங்கி மகிழ்ந்தான். இன்றும் தேவேந்திரன் பூஜையானது விநாயகர் சதுர்த்தியன்று மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பு இச்செய்தியினை பவிஷ்யோத்திர புராணத்தின் உத்திர காண்டத்தில் தீர்த்த மகிமை என்ற பகுதியில் சுவேத விக்னேஸ்வரர் மஹாத்மீயம் என்ற தலைப்பில் 1 முதல் 50 வரை உள்ள சுலோகங்களின் வாயிலாக முதலாவதுஅத்தியாயத்தில் கூறப்படுகிறது. ஸ்ரீ கபர்தீஸ்வர சுவாமி ஸ்தல புராண சுருக்கம் ஸ்ரீ மஹா கணபதியின் திருவருட் கருணையினாலே அகஸ்திய மாமுனிவரின் கமண்டலத்திலிருந்து வெளிப்பட்ட காவிரி அன்னையானவள், நாடு செழித்து நன்மைகள் பல நல்கும் பொருட்டு கிழக்கு சமுத்திரத்தை சென்று அடையும் நோக்குடன் தரணியில் பொங்கி பிரவாஹித்து சோழ நாட்டை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தாள். அது சமயம் சோழப்பிரதேசத்தை ஆண்டு வந்த சூர்ய வம்சத்தை சேர்ந்த ஹரித்வஜன் என்ற மன்னர் இச்செய்தி அறிந்து தனது ரத கஜ துரக பதாக பரிவாரங்களுடன் சென்று பாண்டுசிகரம் என்ற இடத்தில் காவிரியை எதிர்கொண்டு நமஸ்கரித்து மலர்கள் தூவி பலவாறு ஸ்தோத்திரங்கள் செய்து வரவேற்று அழைத்து வந்தார். காவிரி அன்னையும் மன்னர் காட்டிய வழியே பொங்கி எழுந்து ஆரவாரத்துடன் பிரவாஹித்து வந்து கொண்டிருந்தாள். சக்தி வனம் எனப்படும் இத்தலத்திற்கு வந்ததும் இங்குள்ள ஸ்ரீ கபர்தீச பெருமானை வணங்கி துதித்து வலம் வந்து ஈசானபாகத்தில் உள்ள பிலத்துவாரத்தின் உள் வலமாக சுழித்து அந்தர் வாஹினியாக அடியில் சென்று ஓடியது. பூலோகத்தின் அடியில் உள்ள நாகலோகத்தில் இருந்து நாக கன்னிகைகளுடன் நாகராஜர்கள் சிவன் ராத்திரி தினத்தன்று பூலோகத்தில் வெளிப்பட்டு ஸ்ரீ கபர்தீச பெருமானையும் பிறகு பல சிவ க்ஷேத்திரங்களையும் வழிபாடாற்றி பூஜைகள் செய்து மீண்டும் இத்தலத்திற்கு வந்து தனது இருப்பிடமான நாகலோகத்திற்கு திரும்பச் செல்லும் வழி மார்க்கமாக அமைந்திருந்தது இந்த பிலத்துவாரம். காவேரி ஜலம் முற்றிலும் பிலதுவாரத்தினுள் வலம் சுழித்து சென்றடைவதை கண்ட மன்னர் மிகவும் வருத்தமுற்று பலவிதமான யுக்தி உபாயங்களை மேற்கொண்டு பிலதுவாரத்தை அடைக்க முயன்றும் பயனில்லாமல் போயிற்று. மன்னர் மிகவும் வருத்தமடைந்த நிலையில் இது போன்று காவிரி அன்னை தமது சோழநாட்டிற்கு வந்து செழிப்படைய செய்யாமல் மஹா விக்னம் ஏற்பட்டு இடையூறு நேர்ந்து விட்டதே என எண்ணி ஸ்ரீ கபர்தீச பெருமானை பிரார்த்தித்தார். ஸ்ரீ கபர்தீச பெருமான் சுவேத விநாயகருடைய ஷடாக்ஷர மந்திரத்தை மன்னருக்கு உபதேசம் செய்து சுவேத விநாயகரை உபாசனை செய்யும்படி அருளிச் செய்தார். அதன்படி மன்னரும், இடைவிடாது சுவேத விநாயகரின் ஷடாக்ஷர மந்திரத்தை நான்குலக்ஷம் முறை ஜபம் செய்து பிரார்த்தித்தார். சுவேத விநாயகர் மன்னர் முன் தோன்றி எனது பக்தன் ஹேரண்ட முனிவர் கொட்டையூர் என்னும் தலத்தில் தபஸ் செய்து கொண்டிருக்கிறார். நீ அவரை அணுகி உனது எண்ணத்தை பூர்த்தி செய்து கொள்வாயாக என அருளி மறைந்தார். மன்னர் மிகவும் சந்தோஷித்து மன்னரின் பக்கபலமாக இருந்த நாட்டு மக்களின் நற்சேவையே குறிக்கோலென கொண்டிருந்த ஸ்ருதி கீர்த்தி, பிரவாஹன், தர்மக்ஞன், பிகதர்ஷண் என்ற நான்கு மந்திரி பிரதானிகளுடனும் மற்ற பரிவாரங்களுடனும் கொட்டையூர் சென்று ஹேரண்ட முனிவரை வணங்கி நமஸ்கரித்து காவிரி வலம் சுழித்து உட்புகுந்த செய்தியை தெரிவித்து இதற்கு ஒரு உபாயம் கூற வேண்டினார். இச்செய்தியினைக் கேட்ட ஹேரண்ட முனிவர் மன்னருடன் இத்தலத்திற்கு வந்த ஜடா தீர்த்தத்தில் ஸ்நாநானுஷ்டானங்களை முடித்து கொண்டு ஸ்ரீ சுவேத விக்னேஸ்வரரையும் கபர்தீச பெருமானையும் வணங்கி துதித்து காவிரி வலம் சுழித்து செல்லும் பிலதுவாரத்தை வந்து பார்வையிட்டார். சடையுடன் கூடிய ஒரு முனிவரோ அல்லது முடியுடன் கூடிய ஒரு மன்னரோ இந்த பிலத்துவாரத்தினுள் காவிரி ஜலத்துடன் சேர்ந்து உட்புகுந்தால் காவிரி ஜலம் மீண்டும் மேலெழுந்து ஓடத் துவங்கும் என ஒரு உபாயத்தை கூறினார். இதைக் கேட்ட மன்னர் மிகவும் சந்தோஷித்து தன்னால் சோழநாட்டுக்கு காவிரி நீர் கிடைக்கப்பட்டு வளம்செழித்து நன்மைகள் பல கிடைக்கட்டும் என கருதி தாமே பிலத்தினுள் இறங்க முற்பட்டார். ஆனால் நாட்டு மக்களோ, காவிரி அன்னை மட்டும் நாட்டிற்குள் இருந்தால் போதாது அதை பயன்படுத்தி நல்ல பல வளங்களைச் செழிப்படைய செய்யும் வண்ணம் நாட்டை பரிபாலனம் செய்யும் நல்லதொரு மன்னரும், நாட்டிற்கு தேவையென கருதியதை அறிந்த ஹேரண்ட முனிவர் நாம் சொன்ன வாக்கினால் அன்றோ மன்னர் தாமே பிலத்தினுள் விழுந்தொழிய முற்பட்டார் என வருத்தமுற்று முனிவரே பிலத்தினுள் இறங்க முற்படும் தருணத்தில் ஹிதன்ன வாக்கியம் மஹிதன்ன வாக்கியம் ஹிதாஹிதம் நைவது பாஷிணீயம் ஹிதோப தேசேன பிலம் ப்ரவிஷ்டோ ஹேரண்ட கோநாம கபால பிக்சுகு என்பதான இந்த ஹேரண்ட வாக்கிய ஸ்லோகத்தை கூறி நாட்டு மக்களிடையே நன்மை, தீமைகள் எதைக்கூறினாலும் சொல்பவருக்கே தீமை வந்து அடையும் எனவும் இருந்த போதிலும் இந்த ஹேரண்ட முனிவர் எனப்படும் கப்பரை பரதேசியின் மூலமாக நாட்டிற்கு காவிரி நதி கிடைக்கப்பட்டு செழிப்பு உண்டாகட்டும் என கூறி ஞானசாரம் என்ற கணேச தத்துவத்தை ஜபித்தார். கனக மகரிஷியின் உத்தரவின் பேரில் முத்கல மகரிஷியானவர் ப்ரம்மகல்பம் வரை கிருஷ்ணா நதியின் தென்கரையில் இருந்து கொண்டு காணாபத்யம் பரவும்படி செய்யவும், என எனக்கு உத்தரவு செய்திருக்கிறார். நான் பிலத்திற்குள் புகுந்தால் குருவார்த்தையை மீறியவனாக குரு அபராதமடைவேன். ஆதலால் என்னை காப்பாற்ற வேண்டும் சரீரத்தின் முடிவில் சாயுஜ்ய பதவியை அடைய வேண்டும் என்று ஸ்ரீ சுவேத விநாயகரை பிரார்த்தித்தார். ஸ்ரீ சுவேத விநாயகரும் அவ்வாறே அருளிச்செய்து யோக மார்கத்தினாலே பிலத்தினுள் புகுவதற்கான உபாயத்தை அருளினார். ஹேரண்டரும் மனம் மகிழந்து ஸ்ரீ கபர்தீச பெருமானை பிரதக்ஷின நமஸ்காரங்கள் செய்து பிரார்த்தித்து யோக மார்கத்தினால் பிலத்தினுல் பிரவேசித்தார். இச்செய்தியினை நீதி வெண்பா 67-வது பாடலில் காணலாம். இவ்வாறு ஹேரண்டர் பிலப்பிரவேசம் செய்த உடன் ஸ்ரீ காவேரி அன்னையானவள் மிக ஆரவாரத்துடன் வலம் சுழித்து பொங்கி மேலே எழுந்து ஸ்ரீ கபர்தீச பெருமானை வலம் வந்து வழிபட்டாள். எனவே, இத்தலத்திற்கு காவேரி நதி இங்குள்ள ஈசனை வலம் சுழித்து உட்புகுந்தமையாலும் மீண்டும் வலம் சுழித்து வெளிப்பட்டமையாலும் திருவலஞ்சுழி என்னும் காரணப் பெயர் வழங்கலாயிற்று. இச்செய்தியினை மேற்கோள் காட்டி சமய குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலானோர் காவிரி சூழ் வலஞ்சுழி வானனை என்றும், பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே என்றும் தேவார திருப்பதிகங்களில் பாடியுள்ளனர். இத்தலத்தில் பிலம்புகுந்த ஹேரண்ட முனிவர் வளம்புரம் என்ற பெரும்பள்ளம் ஸ்தலத்தை அடைந்து வெளிப்பட்டு முக்தி அடைந்தார் என புராணங்கள் கூறுகின்றது. இங்கு வலம் சுழித்து மேலே எழுந்த காவிரி அன்னையானவள் அழகிய பெண் உருவம் தாங்கி ஸ்ரீ கபர்தீச பெருமானை வழிபட்டு இந்த பிலத்துவார குகையினுள்ளேயே இருக்க வேண்டும் என வேண்டினாள். அதன்படி இந்த பில குகையின் கீழ் நோக்கிய ப்ரவாஹத்தை உடையவளாக இருப்பாய் எனவும் சக்ய நதியினுடைய ப்ரவாக ரூபமாக சமுத்திரத்தை அடைவாய் எனவும் காவிரி நதியின் துவக்கம் முதல் சமுத்திர சங்கமம் முடிய உள்ள அனைத்து ஸ்தலத்தில் பில தீர்த்த ஸ்நானத்தினால் கொடுத்தருள்வாய் என கபர்தீச பெருமான் அருளிச் செய்தார். பில தீர்த்தம் இன்றும் சுவாமி சன்னதியின் ஈசான்ய பாகத்தில் திருமஞ்சன கிணறாக விளங்கி வருகிறது. காவிரி இடா நாடியாகவும், ஜடா புஷ்கரணி பிங்கள நாடியாகவும் பில் தீர்த்தம் சுசும்நா நாடியாகவும் இத்தலத்தில் விளங்கி வருகின்றன. இந்த மூன்று தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்தால் த்ரிவேனி சங்கமத்தில் ஸ்நானம் செய்த பலனை அடைவார்கள் என புராணங்கள் கூறுகின்றன. குறிப்பு மேற்படி வரலாறு பவிஷ்யோத்தர புராணத்தின் உத்திர காண்டத்தில் தீர்த்த மஹிமையில் 4-வது அத்யாயத்தில் நூற்று பதினோறு ஸ்லோகங்களின் மூலம் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ ப்ரஹன்நாயகி அம்பாள் ஸ்தல புராண சுருக்கம் இந்த சக்திவன க்ஷேத்திரத்தில் போதாயன மஹரிஷியின் வம்சத்தில் வந்த யாயாவரர், என்ற ஒரு முனிவர் தனக்கு அனேக ஆண் பிள்ளைகள் இருந்தும், ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று லோக மாதாவாகிய ஸ்ரீப்ரஹன்நாயகியை குறித்து கடுமையாக தபஸ் செய்தார். தபசுக்கிணங்கி அம்பிகையும் காக்ஷிதந்தாள். யாயாவரர் தனது விருப்பத்தை தெரிவித்து ஸாக்ஷாத்லோக மாதாவாகிய ப்ரஹந்நாயகியே தனக்கு பெண் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அம்பாளும் அப்படியே ஆகட்டும் என அருளிச் செய்தார். யாயாவரர் மிகவும் சந்தோஷித்து தனது இருப்பிடம் சென்று மனைவி வேதவதியிடம் தெரிவித்து ஆனந்த பரவசம் அடைந்து இன்புற்று இருந்தனர். அவர்களிடம் கிருபை கூர்ந்த ஸ்ரீ பராசக்தி நல்ல சுப தினத்தில் சுப முஹூர்த்தத்தில், பெண் குழந்தையாக அவதரித்தாள். யாயாவரர் தம்பதிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து தனது குமாரியாகிய பராசக்திக்கு ஸ்ரீ ப்ரஹதம்பாள் என்று பெயர் சூட்டி பக்தி கலந்த அன்புடன் வளர்த்து வந்தனர். அம்பிகையும் தக்க பருவ காலம் அடைந்த பிறகு, ஸ்ரீ கபர்தீச பெருமானை திருமணம் செய்து கொள்ள திருஉள்ளம் கொண்டு, வில்வாரண்யமான இத்தலத்தில் வில்வ மரங்களின் மத்தியில், மணலினால் சிவலிங்கம் பிடித்து, வைத்து பூஜைனைகள் செய்து வணங்கினாள். அப்பொழுது நார்க்கோண வடிவமான தடாகம் ஒன்றை நிர்மானித்து இதில் ஜலம் தந்து அருள கபர்தீச பெருமானை பிரார்த்தித்தாள். கபர்தீசர் தனது ஜடையில் உள்ள கங்கையை தடாகத்தில் பிரவாஹிக்கச் செய்தார். பரேமேஸ்வரனுடைய ஜடையிலிருந்து வந்தபடியால் இத்திருக்குளத்திற்கு ஜடா தீர்த்தம் என்று வழங்கலாயிற்று. மணலினால் பிடிக்கப்பட்ட லிங்கம் ஜடாதீர்த்த திருமஞ்சத்தினால் கரைந்து தனது சிவ பூஜைக்கு விக்னங்கள் ஏற்படாமல் இருக்க ஸ்ரீ விநாயகப்பெருமானை தியானித்தாள். ஸ்ரீ ப்ரஹன்நாயகி, ஸ்ரீ விநாயகப் பெருமானின் பெரும் கருணையினால் மணலினால் ஆன ஸ்ரீ மிருயுது லிங்கம் திடகதி அடைவித்து ஸ்ரீ ப்ரஹந்நாயகியை சந்தோஷிக்கச் செய்தார். மணல் லிங்கம் கலைந்து விடாமல் இருக்க லிங்கத் திருமேனியை அம்பிகை அன்புடன் அரவணைத்து ஆலிங்கனம் செய்த திருஉருவ சிற்பத்தை சுவாமி சன்னதியின் இரண்டாவது வாயிலின் தென்புறத்தில் இப்பொழுதும் காணலாம். ஸ்ரீ ப்ரஹதாம்பிகை தினம்தோறும் ஜடா தீர்த்தத்தைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் ஆராதணைகள் செய்வித்து சடையுடன் கூடிய கபர்தீஸ்வரர், சடைமுடிநாதர் என்ற திருநாமத்துடன் என்னை ஆட்கொண்டு மணம் புரிந்து அருள வேண்டும் என வேண்ட கபர்தீச பெருமானும் அவ்வாறே வரம் அளித்து அருளினார். இந்த செய்தி அறிந்த வேதவதி யாயாவரர் தம்பதி மிகவும் சந்தோஷித்திருக்கும் சமயத்தில், ஸ்ரீ கபர்தீச பெருமானால் ஏவப்பட்டு, அகத்திய முனிவர் தனது பத்தினியான லோபா முத்திரையுடன், யாயவரருடைய ஆஸ்சிரமத்திற்கு திருமணம் பேசச் சென்றார். யாயவரர் அகத்திய முனிவரை வரவேற்று ஆசனங்கள் முதலியவை கொடுத்து, உபசரித்து, வணங்கி சுபமுஹூர்த்தத்தில் திருமணம் பேசி முடித்து, அகஸ்தியரை வழியனுப்பி வைத்து மகிழ்ந்தார். பிறகு நல்ல சுபதினமாகிய உத்தராயணத்தில், சூரியன் மீன ராசியில் பிரவேசித்திருக்கும் பொழுது சந்திரன் கடகராசியில் புஷய நக்ஷத்திரத்தில் சஞ்சரிக்கும் சுபயோக தினத்தில் நல்ல சுபமுகூர்த்த லக்னத்தில் ஸ்ரீ கபர்தீச பெருமான் ஸ்ரீ பிரஹந்நாயகி அம்பிகையை பாணிகிரஹணம் செய்து கொண்டு திருமண காட்சி கொடுத்து அருளினார். அம்பிகை நாம் எப்பொழுதும் இந்த ஸ்தலத்தில் திருமண கோலத்துடன் நித்ய கல்யாண தம்பதியர்களாக இருந்து பக்தர்களுக்கு திருமண காலங்களில் ஏற்படும் தடை, தாமதம் முதலான அனைத்து வித திருமண தோஷங்களையும் நீக்கி, மனதிற்கு இனிய வது வரன்களை அருளிச் செய்து வரம் அளிக்க வேண்டுமென ஈசனிடத்தில் கேட்டு கொண்டதின் பேரில், இந்த தலத்தில் சுவாமி சன்னதியின் வலது பக்கத்தில் அம்பிகை ஆலயம் அமையப்பட்டு பஞ்ச கல்யாண தலங்களான, மதுரை, ராமேஸ்வரம், திருவலஞ்சுழி, திருவிடைமருதூர், கஞ்சனூர் ஆகியவற்றுள் ஒன்றாக விளங்கி வருகிறது. சக்தி ஆதிக்கத்துடன் சக்தியே முதன்மையாக தோன்றிய சக்தி பீடங்கள், அறுபத்து நான்கு. அவற்றுள் ஒன்றாக இத்தலம் விளங்குவதோடு, ஸ்ரீ ப்ரஹந்நாயகியே இத்தலத்தில் ஆதியில் தோன்றி ஈசனை தவம் புரிந்து மணம் புரிந்தமையால் இத்தலத்திற்கு சக்திவனம் என்ற பெயர் ஆதிகாலத்தில் வழங்கி வந்துள்ளது. குறிப்பு மேற்படி சரித்திரம் பவிஷ்யோத்தர புராணத்தின் உத்திர காண்டத்தில் ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தில் இருபத்து மூன்று ஸ்லோகங்களிலும் ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தில் இருபத்து ஐந்து ஸ்லோகங்களிலும் ஸ்ரீ ப்ரஹந்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ கபர்தீச பெருமான் திருமண வரலாறாக கூறப்படுகிறது. ஸ்ரீ வாணி கமலாம்பிகாவின் தோற்றமும் ஸ்ரீ சுவேத விநாயகரின் திருமணமும் சத்யமாகவும், ஞானமயமாகவும் முடிவில்லாத ஆனந்தமயமான நிர்குணமாகவும் விளங்குகின்ற ஆதிகாரணமான ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமானுக்கு கிரிய சக்தியான சித்தி தேவி கமலாம்பாளாகவும், ஞானசக்தியான புத்தி தேவி, வாணியாகவும் பிரபஞ்சத்தில் பக்தர்களின் இச்சைகளை பூர்த்தி செய்தருளும் வண்ணம் இச்சாசக்தி ஆதிக்கத்தை தம்மிடமே நிலை நிறுத்தி உலகமாந்தர்களின் உழர்ச்சிக்கு அடிப்படையான இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற மூன்று சக்திகளையும் ஒருங்கே அமையப்பட்டு ஸ்ரீ வாணி - கமலாம்பிகா ஸமேத ஸ்ரீ சுவேத விக்னேஸ்வர சுவாமியாக இங்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது. ஸ்ரீ வைகுண்டத்தில் மஹாவிஷ்ணு, ஸ்ரீ சுவேத விநாயகரை குறித்து தியானத்திலிருக்கும்பொழுது லக்ஷ்மியின் விருப்பத்திற்கிணங்க மஹா விஷ்ணுவின் நேத்திர கமலத்திலிருந்து ஸ்ரீ சித்திதேவி தோன்றினாள். விஷ்ணுவின் நயன கமலத்திலிருந்து தோன்றியபடியால் சித்தி தேவிக்கு ஸ்ரீகமலாம்பாள் என்று பரமேஸ்வரனால் பெயரிடப்பட்டு வைகுண்டத்தில் லக்ஷ்மி நாராயணனால் மிகுந்த அன்புடன் வளர்க்கப்பட்டு வந்தாள். ஸத்ய லோகத்தில் பிரம்மாவானவர் சுவேத விநாயகரை குறித்து தியானித்திருக்கையில் சரஸ்வதியின் விருப்பத்திற்கிணங்க பிரம்மாவினுடைய வாக்கிலிருந்து ஸ்ரீ புத்தி தேவி தோன்றினாள். பிரம்மாவினுடைய வாக்கிலிருந்து உண்டானதால் புத்தி தேவிக்கு ஸ்ரீ வாணி என்று ஈசனால் பெயர் சூட்டப்பட்டு ஸத்ய லோகத்தில் சரஸ்வதியுடன் பிரம்மாவினால் மிகுந்த பாசத்துடன் வளர்க்கப்பட்டு வந்தாள். சித்தி, புத்தியர்களான வாணி, கமலாம்பிகா இருவரும் வளர்ந்து யவனபருவம் அடைந்தபின் ஸ்ரீ சுவேத விநாயகரை பதியாக அடையும் தங்களது விருப்பத்தை தங்களது தாய் தந்தையர்களிடம் தெரிவித்தனர். தங்களது குமாரிகளின் விருப்பமறிந்த விஷ்ணுவும் பிரம்மாவும் மிகவும் சந்தோஷித்து லஷ்மி-சரஸ்வதியுடன் கூடிய தக்ஷிணாவர்த்தம் எனப்படும் திருவலஞ்சுழி வந்து ஸ்ரீ சுவேத விநாயகரை குறித்து தவம் இருந்தனர். தபசிக்கிரங்கி சுவேத விநாயகர்-காட்சியளித்து வாணி-கமலாம்பிகை ஆகியோர்களை எமக்கு விதிப்படி விவாஹம் செய்து கொடுப்பீர்களாக என அருளி செய்தார். இதைக்கேட்ட விஷ்ணுவும், பிரம்மாவும் மிகவும் சந்தோஷித்து ஸ்ரீ சுவேத விநாயகரை பலவாறாக வணங்கி துதித்து பின் சித்திரை மாதம் சுக்லபக்ஷம் தசமியன்று மஹா விஷ்ணு சித்திதேவியான கமலாம்பாளை விதிப்படி விவாஹம் செய்து கொடுத்தார். ஸ்ரீ சுவேத விநாயகருடைய இடது பக்கத்தில் கமலாதேவி அமர்ந்தாள். பிறகு அதே தினத்தில் பிரம்மதேவன் புத்திதேவியான வாணியை முறைப்படி விவாஹம் செய்து கொடுக்க வாணி தேவியானவள் ஸ்ரீ சுவேத விநாயகருடைய வலப்பக்கத்தில் அமைர்ந்தாள். இத்தலத்தில் உள்ள ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமான் சித்தி புத்தி ஆகியோர்களாகிய ஸ்ரீ வாணி கமலாம்பிகா சமேதராய் திருமணகோலத்துடன் எழுந்தருளி பக்தர்களின் திருமண தடைகளை நீக்கி உரிய காலத்தில் திருமணங்கள் நடைபெற அருள்பாலிக்கிறார். எனவே, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பட்ட சுவேத விநாயகரை வழிபட்டால் மணமாகாதவர்கள் இச்சா சக்தியாகிய சுவேத விநாயகப் பெருமான் அருளால் திருமண தடை தாமதங்களை நீக்கி மனதிர்கினிய வரனையும், ஞானசக்தியாகிய வாணி தேவியின் அருளால் மிகுந்த ஞானவான்களாகவும் அறிவாற்றல் உள்ளவர்களாகவும் கிரிய சக்தியாகிய கமலா தேவியின் அருளால் தனி மனித ஒழுக்க சீலர்களாகவும் பண்பாடு உடையவர்களாகவும் உள்ள வரன்களை அளித்து திருமண வாழ்க்கையில் நன்மைகள் பல நல்கி அருள் புரிகிறார் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஸ்ரீ சுவேத விநாயகப்பெருமானை வழிபட்டால் நமக்கு இச்சா ஞானங்களாகிய உலகியல் வாழ்க்கையில் தேவைப்படும் மன அமைதி இனிய இல்லறம், தயாள குணங்கள் போன்ற நற்பண்புகளை வழங்கி அருள்பாலித்து வருகிறார். அமுத மூர்த்தியாகிய ஸ்ரீ சுவேத விநாயகரை வழிபட்டால் ஞான சக்தியாகிய வாணி தேவியின் அருளினால் கல்வி, ஞானம், புத்தி கூர்மை, பணிவு, தணிவு, பண்பாடு போன்ற ஞான சித்திகளை அடைய அருள் புரிகிறார். சச்சிதானந்த மூர்த்தியான ஸ்ரீ சுவேத விநாயகரை வழிபட்டால் கிரியாசத்தியாகிய கமலா தேவியின் கருணையினால் தனம், தான்யம், தேக ஆரோக்யம், நீண்ட ஆயுள் சத்துருக்களால் ஏற்படும் உபாதைகள் நீங்கப்பெற்று அனுகூலம் அடைய அருள் புரிகிறார் என்று புராணங்கள் கூறுகிறது. குறிப்பு இவ்வாறாக ஸ்ரீ வாணி கமலாம்பிகா ஸமேத ஸ்ரீ சுவேத விநாயகரின் இந்த விவாஹ விதி படல் பவிஷ்யோத்தர புராணத்தின் உத்திர காண்டத்தில் சுவேத விக்னேஸ்வர மஹாத்மியம். ஆறாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.