அருள்மிகு கோலவிழியம்மன் கோயில், Mylapore, Chennai - 600004, சென்னை .
Arulmigu Kolavizhiamman Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000002]
×
Temple History
தல பெருமை
அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில்
கோயில் சிறப்பு
கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர் வாக்கின் மூலம் தெரிய வருகிறது. மேலும் இந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். சிதில மடைந்திருந்த இந்தக் கோவில் 1981-ம் ஆண்டு அடியார்கள் ஆதரவினாலும், மயிலை குருஜி சுந்தரராம சுவாமிகளின் ஆதரவினாலும் திருப்பணி செய்யப்பட்டு வழிபாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தக்கனின் யாகத்தை அழித்தவர் வீரபத்திரர் என்பது புராணம். அதை உறுதிப்படுத்தும் வகையில் வீரபத்திரர் ஆலயம், பத்ரகாளி எனும் கோலவிழியம்மன் கோவிலுக்கு மேற்கே...அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில்
கோயில் சிறப்பு
கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர் வாக்கின் மூலம் தெரிய வருகிறது. மேலும் இந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். சிதில மடைந்திருந்த இந்தக் கோவில் 1981-ம் ஆண்டு அடியார்கள் ஆதரவினாலும், மயிலை குருஜி சுந்தரராம சுவாமிகளின் ஆதரவினாலும் திருப்பணி செய்யப்பட்டு வழிபாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தக்கனின் யாகத்தை அழித்தவர் வீரபத்திரர் என்பது புராணம். அதை உறுதிப்படுத்தும் வகையில் வீரபத்திரர் ஆலயம், பத்ரகாளி எனும் கோலவிழியம்மன் கோவிலுக்கு மேற்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10,000 வருடத்திற்கு முந்தைய அருள்மிகு பிடாரி பத்ரகாளி இந்தியாவின் எல்லைகாளியாக இருந்து அருள்பாலிக்கிறாள். 2,600 வருடங்களுக்கு முன் அருள்மிகு கோலவிழி அம்மன் வடிவச்சிலை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இத்திருக்கோயிலில் ராகு, கேது ஸ்தலம் தனியே அமைந்துள்ளது. இது பரிகாரத்தலம் எனப்படுகிறது.
இத்திருக்கோயிலில் பிரம்மனி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, சாமுண்டி, நாகேந்திரி என்னும் சப்த கன்னிகள் அருள்பாலிக்கின்றன.
ஒரே சன்னதியில் இரண்டு மூலவர்களை அருள்மிகு கோலவிழி அம்மன் மற்றும் அருள்மிகு பத்ரகாளி அம்மன் கொண்டது. இத்திருக்கோயில் இரண்டு மூலஸ்தானம் ஒரு சன்னதியில் உள்ளது
தல விருட்சம் - வேம்பு, அரச மரம்
ஆலய அமைப்பு
வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சன்னிதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை காட்சி தருகின்றன. வடக்கு நோக்கிய கருவறைக்குள் முன்புறம் சிறிய வடிவிலான அம்மனும், பின்புறம் பிரமாண்ட கோலத்தில் சுதைச் சிற்பமாகஅமர்ந்த கோலத்திலும் கோலவிழி அம்மன் காட்சி தருகின்றனர். அபிஷேக ஆராதனைகள் சிறிய அம்மனுக்கும், அலங்காரம் ஆராதனைகள் பெரிய அம்மனுக்கும் நடத்தப்படுகின்றன.
கோலவிழி அம்மன்
அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோல விழி அம்மனாக விளங்குகிறாள். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எண் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எண் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும்.
பத்ர என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என்றால் அது மிகையல்ல.
விழாக்கள்
சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10-ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும். இந்து சமய அறநிலையத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.