தல வரலாறு
அரசவனம் என்று புராணங்களில் போற்றப்பட்டுள்ள முருகனின் திருத்தலம், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில், குன்றக்குடி என்னும் ஊராக தற்போது திகழ்கின்றது.இது காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் வழியில் சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலைக்கந்தன், குன்றைமுருகன், தேனாற்றுடையான், மயூரகிரிநாதன் என்ற பல பெயர்களுடன் மூலவராய் அருள்பாலிக்கின்றார். முன்னோரு காலத்தில், சூரபத்மனின் தவறான உபதேசத்தால், முருகனிடம் சாபம் பெற்ற மயில், அச் சாபத்தைக் கழைய, இந்த அரசவனமாகிய குன்றக்குடியில் மயில் போன்ற தோற்றமுடைய மலையாக மாறி தவமிருந்தது. பின் விமோச்சனம் பெற்றவுடன், அதன் விருப்பத்திற்கிணங்க, இம்மலையில் தமிழ் கடவுள் முருகன் எழுந்தருளினார் என்பது வரலாறு. இதனால் இத்தலத்திற்கு சிகண்டிமலை, மயூரகிரி மற்றும் மயில்மலை என்ற பெயர்களுமுண்டு. இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம். அருட்திரு பாம்பன் குமரகுருதாச சுவாமிகளும் முருகனைப்பற்றி பாடியுள்ளார்.