தல வரலாறு
திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் திருத்தளிநாதர் ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்
இலக்கிய பின்புலம்
மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும் விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண் நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழிதருமிக்(கு) அருளி னோன்காண் பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில் திருத்தளியான் காண்அவன்என் சிந்தை யானே.