தல வரலாறு

வரலாற்றுச் செய்தி : முதல் குலோத்துங்கச் சோழன் காலத்தில் இவ்வூர் சுங்கம் தவிர்த்த சோழ நல்லூர் என வழங்கியது. இதற்கு அழகாபுரி என்ற புராணப் பெயரும் உண்டு.கருவேல மரங்கள் அதிகம் இருந்ததால் கருவேலங்குடி எனவும் ஒரு காலத்தில் ழங்கப்பட்டிருக்கிறது.திருநாவுக்கரசு சுவாமிகள் தமது அடைவுத் திருத்தாண்டகத்தில் ‘கருந்திட்டைக்குடி’ என இவ்வூரைக் குறிப்பிடுக்கின்றார். கரிகாற் சோழ மன்னனின் கருங்குஷ்டம் நீக்கி கருணை பாலித்ததனால் கருணாசாமி என்றும் கருவேலமரங்கள் நிறைந்த பகுதியில் தோன்றிய சிவனார் என்பதால் ‘கருவேலநாதசுவாமி’ என்றும் பலவிதமாக அழைக்கப்படுகிறார். ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டிலேயே செங்கல் கோயிலாகக் கட்டப்பட்ட இக்கோயில் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதலாம் பராந்தகன் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது.
தல பெருமை

இக்கோயில் புராதனச் சோழர்கால கோயில் ஆகும். இத்தலம் குறித்து பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம் மற்றும் சூத முனிவர் இயற்றிய அழாகபுரி புராணம், சமீவனஷேத்திர மகாத்மியம் ஆகியவை கூறுகின்றன. குபேரன் வழிபட்டத்தலம் என்றும் கருங்குட்டமுடைய சோழ மன்னன் ஒருவன் வேங்கை உருவில் தென்பட்ட சிவனை துரத்திச் சென்றான் என்றும் அவ்வேங்கை இத்தலத்திலிருந்த சூரிய புஷ்கரணியில் மறைய அச்சோழ மன்னனும் குளத்தில் மூழ்கி எழ குட்ட நோய் தீர்ந்தது என்றும் அவனே இக்கோயிலை எடுபித்தான் என்றும் பல்வேறு புராணச் செய்திகள் இத்தலம் பற்றிக் கூறுகின்றன.