(திருக்கோயில் தலவரலாற்றுச் சுருக்கம்)
பூவுலகில் மக்களாகப் பிறந்தவர்கள் இன்பநிலை அடைய இறைவனை வழிபடுதல் இயல்பு. அந்த இறைவன் பல இடங்களில் கோயில் கொண்டு அடியார்க்கு அருள்புரிகிறான். அத்தகைய கோயில்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூவகையில் சிறப்புப் பெறுகின்றன.
பல்லவர்களின் தலைநகரமாக விளங்கி, பழம்பெருமை, கலைச் சிறப்பு, பட்டு நெசவு என்று பல்புகழ்கொண்ட காஞ்சிமாநகரத்தில் , காஞ்சியின் நடுநாயமாக, இராஜவீதி என்னும் பிரதான சாலையில் அமைந்து அழகுறப் பொலிவது கச்சபேசம் எனப்படும் கச்சபேஸ்வரர் திருக்கோயிலாகும்.
திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் இந்த இறைவனை வழிபட்டதால் மூர்த்திச் சிறப்பும், நைமிசாரணிய முனிவர்களுக்கு வழிகாட்டியது முதலியவற்றால் தலச்சிறப்பும், தன்னில் மூழ்குவோருக்கு எண்ணிய பயன்களைத் தரும் திருக்குளம் உள்ளமையால் தீர்த்தச் சிறப்பும் பெற்று விளங்குவது இத்திருக்கோயிலாகும். வடக்கு ...(திருக்கோயில் தலவரலாற்றுச் சுருக்கம்)
பூவுலகில் மக்களாகப் பிறந்தவர்கள் இன்பநிலை அடைய இறைவனை வழிபடுதல் இயல்பு. அந்த இறைவன் பல இடங்களில் கோயில் கொண்டு அடியார்க்கு அருள்புரிகிறான். அத்தகைய கோயில்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூவகையில் சிறப்புப் பெறுகின்றன.
பல்லவர்களின் தலைநகரமாக விளங்கி, பழம்பெருமை, கலைச் சிறப்பு, பட்டு நெசவு என்று பல்புகழ்கொண்ட காஞ்சிமாநகரத்தில் , காஞ்சியின் நடுநாயமாக, இராஜவீதி என்னும் பிரதான சாலையில் அமைந்து அழகுறப் பொலிவது கச்சபேசம் எனப்படும் கச்சபேஸ்வரர் திருக்கோயிலாகும்.
திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் இந்த இறைவனை வழிபட்டதால் மூர்த்திச் சிறப்பும், நைமிசாரணிய முனிவர்களுக்கு வழிகாட்டியது முதலியவற்றால் தலச்சிறப்பும், தன்னில் மூழ்குவோருக்கு எண்ணிய பயன்களைத் தரும் திருக்குளம் உள்ளமையால் தீர்த்தச் சிறப்பும் பெற்று விளங்குவது இத்திருக்கோயிலாகும். வடக்கு நோக்கிய ஏழுநிலைகள் கொண்ட இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இஷ்ட சித்தீசம் என்னும் மேற்கு நோக்கிய தனிக்கோயிலை (ஒரே மதிலுக்குள் இரண்டு சிவாலயங்கள்) உள்ளடக்கிய பெருமையும் காஞ்சி கச்சபேசத்துக்கு உண்டு.
இக்கோயிலுக்குரிய தேவாரப் பதிகங்கள் கிடைக்கப்பெறவில்லை. பெருமன்னன் இராஜராஜன் தில்லையுள் திருமுறைகளைக் கண்டெடுத்தபோது கரையானால் அரிப்புண்டு அழிந்துபோன அளவற்ற ஓலைச் சுவடிகளில் இக்கோயிலுக்குரியதும் அழிந்திருக்கலாம். ஏனெனில் தேவார காலத்துக்கு முன்பே உள்ள தலம் இது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் புகழ்பெற்ற இக்கோயில் பேசப்படுகிறது.
நீல மணிமிடற்றன் நீண்ட சடைமுடியன்
நூலணிந்த மார்பன் நுதல்விழியன் தோலுடையன்
கைம்மாள் மறியன் கனல்மழுவன் கச்சாலை
எம்மான் இமையோர்க் கிறை
என்பது அந்நூலில் காட்டப்பட்ட மேற்கொள் பாடல் ஆகும். இதனால் இத்தலத்தின் பழமையை அறியலாம்.
வரலாறு
திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள், ஒருமுறை ஐம்பெரும் பூதங்களையும், திருமால், பிரமன் மற்றும் அனைத்துச் சராசரங்களையும் அழித்தார். இரவு - பகல் அற்ற பெருவெளியில் உமாதேவியார் காணும்படித் திருநடனம் ஆடினார். மீளவும் உலகைப் படைக்க எண்ணினார். எல்லா உலகங்களும் அழிகின்ற காலத்திலும் அழியாது உள்ள காஞ்சிபுரத்தில், சோதிமயமான லிங்கத்தில் (கச்சபேசத்தில்) இறைவன் தாமே தோன்றித் தம்சக்தியால் உலக சராசங்களையும் மால், அயன் முதலிய தேவர்களையும் மீண்டும் படைத்தருளினார். அச்சோதி லிங்கத்தைப் பிரமதேவன் சரசுவதியுடன் வழிபட்டுப் படைப்புத் தொழிலைப் பெற்றான்.
பின்னொரு பிரம்மகற்பத்தில் தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறுவதற்காக, மந்தர மலையை மத்தாக இட்டுப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலினுள் அமிழ்ந்த மந்தர மலையைத் திருமால் ஆமை வடிவம் கொண்டு தன் முதுகில் தாங்கி நிறுத்தி அமுதம் கிடைக்க வழி செய்தார். இதனால் செருக்குற்ற திருமால் உலகம் அஞ்சும்படி அக்கடல் முழுவதும் திரிந்து கலக்கினார். அதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை தஞ்சமடைய அவர் கருணையால் அவ்விடம் சென்று அவ்வாமையை அழித்து, அதன் ஓட்டினைத் தமது மார்பில் அணிந்திருக்கும் வெண்டலைமாலையின் நடுவில் கோர்த்து அணிந்து கொண்டார்.
ஆணவம் அழிந்த திருமால், தாம் செய்த குற்றம் நீங்க இச்சோதிலிங்கத்தினை வழிபட்டார். அதன் மூலம் நீங்காத சிவபக்தியும், வைகுந்தப் பதவியின் தலைமையும், தாம் பூசித்த லிங்கம் அன்று முதல் கச்சபேசம் (கச்சபம் ஆமை) என்று பெயர் பெறவும், இத்தலம் காசியினும் உயர்தகுதி பெற்று விளங்கவும் வரம் பெற்றார். இக்கச்சபேசப் பெருமானை வழிபட நினைத்தோர், வழிபடச் சென்றோர், வழிபட்டோர், யாவரும் இவ்வுலகில் துன்பம் நீங்கி இன்பம் பெற்று முடிவில் முத்தியும் பெறுவர்.
கச்சபேசன் தனைக் கும்பிடச் சென்றவர் கண்டவர்,
கருதினர் யாவரும் மாறிலா முத்திபெற்று உய்வர்
என்று காஞ்சிப்புராணம் இதனை விளக்கிக் கூறுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள இஷ்டசித்தி தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் நீராடி, புதுமண்சட்டியில் பச்சரிசி மாவை வெல்லம் கலந்து பிசைந்து, அகலில் நெய்யிட்டுத் தீபமேற்றி, தேங்காய், பூ, பழம், முதலியவற்றை அந்த மாவில் வைத்துத் தலையில் சும்மாடு வைத்துச் சட்டியைத் தாங்கிக்கொண்டு கோயிலை வலம் வருவர். இதனால் தலைவலி, காதுவலி, காதில் சீழ்வடிதல், தலைக்குத்து போன்றவை நீங்கி இன்பம் பெறுவது இன்றும் நடைபெற்றுவரும் உண்மை. மாவிளக்குப் போடுவதாக வேண்டிக்கொள்ளுவதல் இத்தலத்துக்குரிய சிறப்பாகும். இக்கோயிலை ஞாயிற்றுக்கிழமை கோயில், மாவிளக்கு கோயில் என்பது மக்கள் வழக்கு.
மிகப் புராதமான இக்கோயில் பல்லவர்காலக் கட்டிடக் கலையைப் பறைசாற்றுவது ஆகும். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் கருவறையில் மூல மூர்த்திக்குப் பின்புறச் சுவற்றில், இறைவன் இறைவியுடன் குமரனும் அமைந்துள்ள சோமாஸ்கந்த வடிவத்தைக் காணலாம். இந்தக் கோயிலும் அத்தகைய அமைப்பு உடையதே ஆகும். இத்தலம் பிருத்வி (மண்) தலம் ஆதலால் மூல லிங்கம் மண்ணால் ஆனது. இதற்குப் புனுகுசட்டம் சாத்தப்பட்டு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். மேலும் சிறந்த அமைப்பாக மூலவருக்கு மேல் உள்ள விமானம் கருங்கல்லாலேயே கட்டப்பட்ட பெருமையுடையது. இது வேறெங்கும் இல்லாத சிறப்பாகும்.
ரிஷிகோபுரத்திலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குச் செல்லும் மண்டபத்தின் இருபுறமும் உள்ள கல்தூண்கள், படுத்த நிலையில் உள்ள சிங்கங்கள் தங்கள் தலைமீது தாங்கும் அமைப்புடையவை. நீண்ட வரிசையில் அந்தத்தூண்கள் நிற்கும் கலையழகு உள்ளம் கவர்வதாகும். கோயிலின் வெளிச்சுற்றில் உள்ள யாகசாலை மண்டபம், அமர்ந்த சிங்கங்கள் தம் தலைமீது தாங்கும் தூண்களைக் கொண்டதாகும். இக்கோயிலில் உள்ள கோஷ்ட மூர்த்தமான தட்சணாமூர்த்தி மிகுந்த கலையழகு உடையவர். சண்டேஸ்வர மூர்த்தமும் இப்படிப்பட்டதே. கருவறையைச் சுற்றி வலம்வரும் வெளிச்சுற்றில், வாயுமூலையில் சரஸ்வதி தேவி தனிக்கோயில் கொண்டமர்ந்து அருள்பாலிப்பது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
புகழ்மிக்க பழம்பெருங்கோயிலான இச்சிவாலயத்தில் காமிக ஆகமத்தின் வழியில் பூசைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சித்திரை மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரை உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழாகவும், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளும், மார்கழித் திருவாதிரையும் சிறப்புத் திருநாட்களாகும்.