


தல வரலாறு

கன்னியாக்குமரி பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நகரிலிருந்து கிழக்கே ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் தாடிக்கொம்பு என்னும் ஊரின் மேற்கில் குடகனாற்றின் மேற்குக்கரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அகரம் முத்தாலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. அகரம் முத்தாலம்மன் ஒரு வேண்டுதல் தெய்வமாகும். பக்தர்களின் நேர்மையான கோரிக்கை எதுவானாலும் அதனை நிறைவேற்றித் தரும் உன்னத தெய்வமாகும். ஆந்திரத்தில் மன்னார் கிருஷ்ணதேவராயர் காலத்தின் இரண்டொரு தலைமுறைக்குப்பின்பு இன்றைக்குச் சுமார் 500 ஆண்டுகளுக்குமுன் விஜயநகர சாம்ராஜ்யத்தில் தண்டல் நாயகராக இருந்த சக்கரராயர் என்ற அக்தணப்பெரியவர் அப்போது நேர்ந்த முகலாயப் படையெடுப்பின் காரணத்தால் இந்துமதம் சார்ந்தவர்களுக்குத் துன்பங்கள் தொடர்ந்துவர, விஜய நகரை விட்டுத் தாம் வெளியேற விரும்பி, தம் குலதெய்வமாகிய முத்தியாலு அம்மனின்...கன்னியாக்குமரி பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நகரிலிருந்து கிழக்கே ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் தாடிக்கொம்பு என்னும் ஊரின் மேற்கில் குடகனாற்றின் மேற்குக்கரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அகரம் முத்தாலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. அகரம் முத்தாலம்மன் ஒரு வேண்டுதல் தெய்வமாகும். பக்தர்களின் நேர்மையான கோரிக்கை எதுவானாலும் அதனை நிறைவேற்றித் தரும் உன்னத தெய்வமாகும். ஆந்திரத்தில் மன்னார் கிருஷ்ணதேவராயர் காலத்தின் இரண்டொரு தலைமுறைக்குப்பின்பு இன்றைக்குச் சுமார் 500 ஆண்டுகளுக்குமுன் விஜயநகர சாம்ராஜ்யத்தில் தண்டல் நாயகராக இருந்த சக்கரராயர் என்ற அக்தணப்பெரியவர் அப்போது நேர்ந்த முகலாயப் படையெடுப்பின் காரணத்தால் இந்துமதம் சார்ந்தவர்களுக்குத் துன்பங்கள் தொடர்ந்துவர, விஜய நகரை விட்டுத் தாம் வெளியேற விரும்பி, தம் குலதெய்வமாகிய முத்தியாலு அம்மனின் கட்டளைப்படி அத்தெய்வத்துடன் தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு வந்து அந்தணர்கள் வாழ்ந்த அகரம் ஊரில் அத்தெய்வத்தின் கோயிலைத் ஸ்தாபனம் செய்து முறைப்படி வழிபாடும் திருவிழாவும் நடத்தி வந்தார். அவருக்குப்பின் அவருடைய சந்ததியில் அவர்பெயர் கொண்ட ஒருவரின் காலத்தில் திருவிழாக்களுக்கு வாணங்கள் செய்துதரும் வாணக்காரன் ஒருவன் அகரம் முத்தாலம்மன் கோயில் தனக்கே உரிமை என்று மதுரை நீதிமன்ற நடுவரிடம் முறையிட்டான். வழக்கைக் கேட்ட நீதிபதி சக்கரராயரை வரவழைத்து வாணக்காரனின் வழக்குப் பற்றிக் கூறினார். அதனைக்கேட்ட சக்கரராயர் அக்கோயில் தமக்கு உரியது என்பதற்குச் சான்றாக திருவிழாச் செய்தியை சாட்டுதல் செய்யும் உருமிமல்லன் விஜய நகரத்திலிருந்து முத்தாலம்மனைத் தமது முன்னோராகிய சக்கராயர் கொண்டு வந்த செய்தியைக் கூறி சாட்டுதல் செய்வான் என்றும் அந்த வேளையில் அம்மன் அருளால் மழை பெய்யும் என்றும் நீதிபதியிடம் கூறினார். நீதிபதியும் உருமிமல்லனை அழைத்துவரச் செய்து திருவிழாச் செய்தியை சாட்டுதல் செய்யும்படி கூறினார். உருமிமல்லன் சாட்டுதல் செய்த அளவில் மதுரை நகரமே அதிசயிக்கும்படி மழை கொட்டியது. உண்மையறிந்த நடுவர் அகரம் கோயில் சக்கரராயருக்கும் அவருடைய சந்ததிக்கும் உரிமை என்று தீர்ப்பளித்தார். பின்னாளில் அவருடைய சந்ததிகளின் பொறுப்பில் கோயில் இருந்த நிலையில் அவர்கள் பெற்ற கடன்களுக்காக, கடன் கொடுத்தவர்கள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். கடன் கொடுத்தவர்களுக்கே கோயில் உரிமையாகும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு வரவிருந்ததால் தாடிக்கொம்பின் பெரியோர்கள் பதினான்குபேர் கூடி அக்கடன் தொகை முழுவதையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் கோயிலுக்குரிய கிரையத்தொகையாக செலுத்தி கோயில் உரிமை தமக்காகும்படிநிலைப்பாட்டுறுதி பெற்றனர்.அந்தப் பெரியோர்கள் பதினான்குபேரும் பரம்பரை அறங்காவலர்களாகத் தொடர்ந்து வழிபாடுகளும், திருவிழாவும் திருப்பணிகளுமாகக் கோயிலைப் பராமரித்து வருகிறார்கள். அவர்களுக்குப் பின்பு அவர்களின் சந்ததிகள் அப்பொறுப்பைப் பெறுகிறார்கள். இவர்களுள் ஒருவர் அறங்காவலர் குழுவின் தலைவராகப் பரம்பரையாக இருந்து வருகிறார். தற்போது திரு சு.ம. மாரிமுத்து அவர்கள் தமது தந்தையாருக்குப்பின் அறங்காவலர் குழுவின் தலைவராகச் சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார். இந்த ஆலயத்தின் கருவறையில் சுதையால் செய்யப்பட்ட இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்னும் மூன்று திருவுருவமாக முத்தாலம்மன் சிலை இருந்து வந்தது. 2005 ஆம் ஆண்டு இக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது சுதை வடிவத்தை மாற்றி கல்சிற்பங்களாக அம்மன் வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பெற்றன.மேலும் கருவறையில் அம்மனை வழிபட்ட குருமா முனிவரின் ஜீவசமாதியும் அவருடைய பண்டாரப்பெட்டியும் உள்ளது. அம்மனுக்கு செய்யும் பூஜைகள் யாவும் குருமா முனிவரின்பண்டாரப்பெட்டிக்கும் உரியதாகிறது. அம்மன் கோயிலானது கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகப்பு மண்டபம், சுற்றுப்பிரகாரம் என்ற அமைப்பில் விளங்குகிறது. சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், சுரலிங்கேஸ்வரர், விசாலாட்சி, பாலமுருகன், மகாலெட்சுமி, துர்க்கை, நவக்கிரகங்கள் எனத் தனிச் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தின் தென்புறத்தில் இக்கோயிலின் காவல் தெய்வமாகிய பூதராஜாவும்,வடபுறத்தில் பூதராணியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். விநாயகர் ஞானமாகிய அருளை வாரி வழங்குவதால் அவர் அருள்ஞான சுந்தரமகாகணபதி என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் மற்ற தலங்களுக்கு இல்லாத சிறப்பாக அம்மன் மூன்று வடிவங்களில் திகழ்வதும் சுரலிங்கேஸ்வரர் நாற்புறமும் முகம்கொண்டவராக விளங்குவதும் கௌளி(பல்லி) சொல்லும் குறியே அம்மனின் உத்தரவாகக் கொண்டு திருவிழா நடத்துவதும் ஆகியவற்றைக் கூறலாம். இக்கோயிலில் பிரசித்திப்பெற்ற திருவிழா ஆவணி மாதம் அம்மனிடம் உத்தரவு கேட்கும் நிகழ்விலிருந்து களைகட்டுகிறது. ஆவணி மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமையாகில் அன்றே உத்தரவு கேட்கும் நிகழ்வு நடைபெறும். அந்த 10ஆம் நாள் வேறு கிழமையாகில் 10ஆம் நாளுக்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமையில் உத்தரவு கேட்கும் நிகழ்வு நடைபெறும். உத்தரவு கேட்கும் நாளில் கோயிலில் மாலை நேரத்தில் சுற்றுப்புற பதினெட்டுபட்டி ஜனங்கள் மற்றும் முக்கியஸ்தற்களின் முன்னிலையில் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள பூதராணியின் சிலையிலோ அதன் அருகில் சுவரில் உள்ள திருவாட்சியிலோ கௌலி(பல்லி) சொல்லும் குரலே அம்மனின் உத்தரவாகக் கொண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்படுகிறது. அம்மன் சன்னதிக்குத் தென்புறத்தில் கௌலி(பல்லி) சொன்னாலோ வடபுறத்திலும் சொல்லாதிருந்தாலோ அந்த ஆண்டில் திருவிழா நடைபெறுவதில்லை.அம்மனின் உத்தரவு கிடைத்ததிலிருந்து திருவிழாவுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தொடர்கின்றன. ஐப்பசிமாதம் முதல் செவ்வாய்க்கிழமையும் அதற்கு முந்திய ஒன்பது நாட்களுமாகக் கணக்கிட்டு திருவிழா பத்துநாட்கள் நடைபெறும். இந்த பத்துநாட்களில் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை இரவில் திருவிழா பற்றிய சாட்டுதல் நிகழ்விலிருந்துதிருவிழா தொடங்குகிறது. மறுநாள் திங்கட்கிழமையிலிருந்து ஒவ்வொருநாள் இரவும் பண்டாரப் பெட்டியைப் பல்லக்கில் வைத்து அம்மனின் உற்சவ மூர்த்தியுடன் சகல விமரிசைகளோடும் பூஜைகளோடும் கோயிலிலிருந்து கொலுமண்டபத்திற்கு அழைத்து வருவார்கள்.அந்த ஒவ்வொரு நாள் இரவும் புராண, இதிகாச நாடகங்கள் முதலான கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் காலையில் பண்டாரப்பெட்டியுடன் உற்சவ மூர்த்தியை கொலுமண்டபத்திலிருந்து கோவிலுக்கு அழைத்து வருவர்.விழாவின் ஆறாம் நாளாகிய வெள்ளிக்கிழமை காலையில் உரிய பூஜை, புனஸ்காரங்கள் செய்து சிலை வடிப்பதற்குரிய வேளாளர்களால் சர்க்கரை, முட்டை, ஏரியில் எடுக்கப்பட்ட தூயமண் ஆகியவற்றால் விழாவுக்குரிய அம்மன்சிலைவடிவமைக்கப்படும். அம்மன் பூஞ்சோலைக்குச் செல்லும் செவ்வாய்க்கிழமைக்கு முந்திய நாளாகிய திங்கட்கிழமைதான் விழாவுக்கே பிரதானமாகிய கண்திறப்பு வைபவம் நடைபெறும் நாளாகும். அன்று காலை சுமார் 10 மணியளவில் அரசின் முக்கிய அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் பூஜைகள், ஆராதனைகள் ஆகியவற்றை முறைப்படி செய்து கண்திறப்பு மண்டபத்தில் விழாவுக்காக வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலைக்கு முன்புறம் இடப்பட்ட திரைச்சீலையை விலக்கி அம்மன் வடிவத்தைக் கண்குளிரக்காணும் நிகழ்ச்சியாகிய கண்திறப்பு வைபவம் நடைபெறும். பின்னர் இந்நிகழ்வைக் காண்பதற்காகப் பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ள ஜனத்திரள்களுக்கிடையே கண் திறப்பு மண்டபத்திலிருந்து அம்மன் ஆயிரம்பொன் சப்பரத்தில் கொலுமண்டபத்திற்கு அழைத்து வரப்படுவார். அன்று பகல் முழுவதும் அம்மன் மிக்க அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அந்த கொலுமண்டபத்தில் சேவை சாதித்து அருள் பாலிப்பார். அன்றைக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதலும் தண்ணீர் பந்தலில் நீரும் மோரும் வழங்குதலும் வேண்டுதலுக்காக கோயிலுக்கு ஆடு, மாடு, கோழி, தானியங்கள், பழங்கள் வழங்குதலும் நடைபெறும். கோரிக்கை நிறைவேற்றியவர்கள் முடிக்காணிக்கை வழங்க பலர் அக்னிச் சட்டி எடுத்தும் வினோத வேடங்கள் தரித்தும் தம் பக்தியை புலப்படுத்துவர். அன்றைக்கு ராத்திரி யாமப்பொழுதில் அம்மன் கொலுமண்டபத்திலிருந்து புஷ்ப விமானத்தில் வாணக்காட்சி மண்டபத்திற்குச் சகல விமரிசைகளுடன் வருவார். அம்மன் அங்கு வந்த பின் பூஜை ஆராதனைகளுக்குப் பின்னர் விடியல் வரை விதவிதமாக புதுமைகளுடன் ஜனங்கள் வியந்து பாராட்டும் வகையில் வாணக்காட்சிகள் நடைபெறும். மறுநாள் செய்வாய்க்கிழமை பகல் இரண்டு மணியளவில் வாணக்காட்சி மண்டபத்திலிருந்து அம்மன் சொருகுபட்டை விமானத்தில் மேளதாளங்கள், தாரை, தப்பை, கொம்பு, சென்டைமேளம் ஆகியவை முழங்க மிக விமரிசையாக ஜனத்திரள்களுக்கிடையே பூஞ்சோலைக்கு செல்லும் வைபவம் நடைபெறும். அம்மன் பூஞ்சோலைக்கு சென்றதும் பெருமழை பெய்து அம்மழையிலேயே அம்மன் குளிர்ச்சியடைவது ஆண்டாண்டுகாலமாகத் தவறாமல் நடைபெறும் வழக்கமாயுள்ளது. இவ்விழாவில் வியாபாரிகள் தத்தமக்குரிய கடைகள் அமைத்து வருவாய் ஈட்டுவதும் வழக்கமான நடைமுறையாகும். இக்கோயிலில் விநாயகருக்கு தேங்காய்மாலை சார்த்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பதும் காவல் தெய்வமாகிய பூதராஜாவை வழிபட்டால் தம்தொழில் மற்றும் வழக்கு தொடர்பான சிக்கல்கள் நீங்கும் என்பதும் அம்பாளின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சையை உட்கொண்டும் மஞ்சள்கிழங்கைப் பூசியும் வழிபட்டால் குழந்தைப்பேறு வாய்க்கும் என்பதும் மக்களின் மகிழ்வான நம்பிக்கையாகும். பெருமை வாய்ந்த அகரம் அருள்மிகு முத்தாலம்மனை தரிசித்து நினைத்த காரியங்கள் கைகூட பெற்று மகிழ்வான வாழ்வை எய்திச் சிறப்பு பெறுவோம். இத்திருக்கோயிலானது ஒரு பிராத்தனை ஸ்தலம் ஆகும். 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இங்கு ஐப்பசி மாத பிரமோற்சவம் வெகுசிறப்பாக நடைபெறும். இது மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆகும். குழந்தைகள் வரம் வேண்டுவோர், திருமணம் ஆகாதோர் இத்திருக்கோவிலுக்கு வந்து சென்ற பின்பு வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை திருவிழாவின்போதுசெலுத்துகின்றனர். தினசரி பூஜைக்குப் பின்பு தீர்த்தம் கொடுக்கும் வழக்கும் அம்மன் சன்னதிகளில் இங்கு தான் உள்ளது.
