


தல பெருமை

ஸ்தல வரலாறு நீர் வளம், நில வளம் நிறைந்த உத்தமபாளையம் தென்காளஹஸ்தி என்றும் குறிப்பிடப்படுகின்றது.இவ்வூர் முன்பு காட்டூர் என அழைக்கப்படுகிறது. சங்ககாலம் தொட்டு உத்தமபளையம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.கி.பி.10 -ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய போது இவ்வூரும் சோழநாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த உண்மையை அருகிலுள்ள சின்னமனூர் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன.இவ்வூரின் பாளையக்காரராக இருந்த உத்தப்ப கொண்டமநாயக்கரின் பாளையம் என அழைக்கப்பட்டது.பின்பு இவ்வூர் சுருக்கமாக உத்தமபாளையம் என அழைக்கப்பட்டு வருகிறது. ...ஸ்தல வரலாறு நீர் வளம், நில வளம் நிறைந்த உத்தமபாளையம் தென்காளஹஸ்தி என்றும் குறிப்பிடப்படுகின்றது.இவ்வூர் முன்பு காட்டூர் என அழைக்கப்படுகிறது. சங்ககாலம் தொட்டு உத்தமபளையம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.கி.பி.10 -ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய போது இவ்வூரும் சோழநாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த உண்மையை அருகிலுள்ள சின்னமனூர் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன.இவ்வூரின் பாளையக்காரராக இருந்த உத்தப்ப கொண்டமநாயக்கரின் பாளையம் என அழைக்கப்பட்டது.பின்பு இவ்வூர் சுருக்கமாக உத்தமபாளையம் என அழைக்கப்பட்டு வருகிறது. அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயிலானது மிகவும் பெரியதும், பழமையானதும்,வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.இக்கோயில் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. இக்கோயிலின் வரலாற்றை அறிய இங்குள்ள பட்டயம், கோயிலின் தல வரலாறு செய்திகளைக் கூறும் செப்புப்பட்டயம், ஓலைச்சுவடிகள் மற்றும் செவி வழிச் செய்திகள் மிகவும் உதவுகின்றன. கி.பி. 1689- ம் ஆண்டு முதல் 1706 ஆம் ஆண்டு வரை மதுரை நாயக்க அரசியாக இருந்தவர் இராணி மங்கம்மாள், எல்லை தகராறு காரணமாக திருவிதாங்கூர் மன்னன் இரவிவர்மனுக்கும் இராணி மங்கம்மாளுக்கும் போர் நடைபெற்றது. உத்தமபாளையம் வட்டம், கூடலூரிலுள்ள கூடலழகிய பெருமாள் கல்வெட்டு இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறது.இப்போரின்போது கெங்கப்ப நாயக்கர், சாமிநாத நாயக்கர், விசுவநாத நாயக்கர் போன்றவர்கள் படைத்தளபதியாகவும்,பிச்சை பிள்ளை என்பவர் உத்தமபாளையம் கணக்கப்பிள்ளையாகவும் இருந்து வந்துள்ளனர். பிச்சை பிள்ளை திருப்பதிக்கு அருகிலுள்ள திருக்காளகஸ்தியில் எழுந்தருளியிருக்கும் காளகஸ்தீசுவரரின் தீவிர பக்தராக இருந்தார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை மாசி மகா சிவராத்திரி தினத்தன்று திருக்காளகஸ்தி சென்று இறைவனை வழிபாடு செய்து வந்தார். முதுமைப்பருவமெய்திய பிச்சைக்கணக்கரால் திருக்காளகஸ்தி சென்று இறைவனை வழிபட இயலவில்லை. தன்னுடைய இயலாமையை தாங்க முடியாத பிச்சை கணக்கர் பல நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டு இறைவனிடம் வேண்டினார். பிச்சைக்கணக்கரின் பக்தியை ஏற்றுக்கொண்ட இறைவன் அவரின் கனவில் அந்தணக் குழந்தை வடிவில் தோன்றி ````காட்டூரில் அமைந்துள்ள வில்வ வனத்தில் வெள்ளை அரளி பூத்திருக்கும் மரத்தடியில் நீ என்னை கண்டு தரிசிக்கலாம்.அங்கிருக்கும் என்னை நீ விரும்பும் இடத்தில் கோயில் அமைத்து வணங்கலாம் ````எனக்கூறி மறைந்தார். அடுத்த நாள் பிச்சைக்கணக்கர் தான் கண்ட கனவினை காட்டூர் மக்களிடம் கூறியபோது மக்கள் அளவற்ற ஆனந்தத்தில் மூழ்கினார்கள்.பிறகு அனைவரும் வண்டி கட்டிக்கொண்டு வில்வ வனம் சென்று பார்த்தபோது, அங்கு வெள்ளையரளி பூத்திருந்த மரத்தடியில் இறைவனை லிங்க வடிவில் கண்டபோது ஆனந்தக் கூத்தாடினர். ஓம் நமச்சிவாயா மந்திரம் சொல்லி சிவபெருமானை ஒரு வண்டியில் எழுந்தருளச் செய்து, ஊருக்குள் கொண்டு வரும் போது இடையில் வண்டியில் அச்சு முறிவு ஏற்பட்டது.எவ்வளவோ முயன்றும் வண்டியை அவ்விடத்திலிருந்து நகர்த்த முடியவில்லை. ஆப்போது அருகில் ஆறுமுகர் உருவில் முருகன் அங்கு எழுந்தருளியிருந்ததை மக்கள் கண்டுகளித்தனர்.அவ்விடத்திலேயே கோயில் அமைப்பது என அனைவரும் தீர்மானித்து,தற்போது கோயிலுள்ள இடத்திலேயே திருக்காளாத்தீஸ்வரருக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் வேத மந்திரம் முழங்க திருக்கோயில் அமைத்தனர். பின்பு அம்மன் உருவம் செய்ய சிற்பி பலர் வரவழைக்கப்பட்டு முயற்சி செய்தனர்.எவ்வளவோ முயன்றும் அம்மன் உருவம் அமையவில்லை.ஏதேனும் குறைபாடு இருந்துகொண்டே இருந்தது.மனமுடைந்த சிற்பிகளும், மக்களும்,பிச்சைக்கணக்கரும் மீண்டும், மீண்டும் இறைவனை மனமுவந்து விரும்பி வேண்டினர்.வேண்டிய பலன் வீண்போகவில்லை. ஒரு வெள்ளிக்கிழமையன்று பிச்சைக்கணக்கர் கனவில் மீண்டும் தோன்றிய திருக்காளாத்தீஸ்வரர், ````முல்லையாற்றில் நுங்கும் நுரையுமாக வெள்ளம் பெருக்கெடுத்து வரும் மூங்கில் கூடையில் அமர்ந்து அம்மன் அந்த வெள்ளத்தில் பவனி வருவாள்`` எனக்கூறி மறைந்தார்.சில நாட்களில் பெரும்மழை பெய்து ஆற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இறைவன் அருளியபடி அம்மன் சிலையுடன் செல்வ விநாயகர் சிலையும் ஆற்று வெள்ளத்தில் மூங்கில் கூடையில் எழுந்தருளியதைக் கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றதை வருணிக்க வார்த்தைகளே இல்லை.அம்மனையும், செல்வ விநாயகரையும் கோயிலில் எழுந்தருளச் செய்து கர்ப்பக்கிரகம்,அர்த்த மண்டபம்,மகா மண்டபம் போன்றவை கோயிலில் அமைத்தனர். பிச்சைக்கணக்கரின் முயற்சியாலும்,இவ்வூர் செல்வந்தர்கள் தாராள மனப்பான்மையாலும்,இராணி மங்கம்மாளின் கொடையினாலும் இத்திருக்கோயில் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டது. திருக்காளத்தீஸ்வரர் கோயிலின் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும், நாயக்கர் கால கட்டிட கலையை விளக்குவதன் மூலம் இத்திருக்கோயிலானது மங்கம்மால் காலத்தில் கட்டப்பட்டது என அறிய முடிகிறது.எண்ணிலடங்காத அழகிய வளைவுகள்,பிரம்மாண்ட தூண்கள்,அழகிய வேலைப்பாடுகள் அடங்கிய மண்டபங்கள், சிற்பங்கள், ஓடும் குதிரையில் குதிரை வீரர்கள் அமர்ந்திருக்கும் சிற்பங்கள் ஆகியவை நாயக்கர் கால கட்டிடக் கலையை உணர்த்துகின்றன. தலச்சிறப்பு ஒரு சிறப்பான ஆலயத்திற்கு எடுத்துக்காட்டாக பசுமை நிறைந்த வயல்கள் மூன்று பக்கம் சூழ இக்கோயில் அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. இக்கோயிலின் கிழக்குப் பக்கம் முல்லையாறு ஓடுகிறது. ஆற்றங்கரையில் அமைந்திருப்பதால், காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒத்திருக்கின்ற உண்மை புலனாகும். 16 தூண்கள் கொண்ட அலங்கார மண்டபம் இக்கோயிலின் எதிர்புறம் முல்லையாற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. நந்தி மண்டபம் இக்கோயிலில் இராஜ கோபுரம் முன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.இராஜ கோபுரத்தின் தென்பகுதியில் விநாயகர் சன்னதியும் அமைந்துள்ளது.கோயிலின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியில் தென்னை, மா மரங்களும் அழகிய மலர்களும் உள்ள குளுமையான நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை ஸ்தலம் இத்திருக்கோயிலுள்ள அம்மன் அருள்மிகு ஞானாம்பிகையாக அருள்புரிகின்றார்.மேன்மையான கல்விச்செல்வம் பெருகவும், நீண்டகாலமாக திருமணமாகாத கன்னியர்கள் விரைவில் திருமாங்கல்ய பலன் பெறவும் அருள்மிகு ஞானாம்பிகையை வழிபாடு செய்ய நற்பலன் ஏற்படும் என்பது சிறப்பாகும். திருக்கோயிலின் வடக்குப் பக்கம் இராகுவும்,கேதுவும் தனித்தனிச் சன்னதிகளில் தம்பதிகள் சமேதராக அமைய காட்சி அளிக்கிறார்கள்.இவர்களை வழிபாடு செய்தால் திருமணத்தடை உள்ளிட்ட அனைத்து விதமான தடைகளும் விலகும் என்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இத்திருக்கோயிலில் ஆறுமுகமாக முருகன் காளத்தீஸ்வரர் சன்னதிக்கும், ஞானாம்பிகை சன்னதிக்கும் இடையில் அமைக்கப்பட்டிருப்பதால்,சோமாஸ்கந்தராகிறார்.தென்திசை நோக்கி நடராஜர்,ஆடலரசாக அருள்புரிகிறார்.63 நாயன்மார்கள் இத்திருக்கோயிலின் தென்பகுதியில் வடக்கு நோக்கி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.தட்சிணாமூர்த்தியின் எதிர்புறம் சப்த கன்னியர்களின் வடிவங்களும் அருள்பாலிக்கின்றன. திருக்காளத்தீஸ்வரர் சன்னதியின் பின்பகுதியில் காசிவிஸ்வாநாதர் சன்னதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் லிங்கோத்பவர் மண்டபம் ஆகியவை கோபுரங்களின்றி அமைந்துள்ளன. கோயிலின் ஸ்தல விருட்சமாக செண்பக மலர்க்கொடி ஞானம்மாள் சன்னதிக்குப் பின்புறம் நாகேசுவரருக்கு நிழல் தரும் விதமாக மணம் தருகின்றது. நவக்கிரங்கள், சண்டிகேசுவரர், சண்டிகேசுவரி, துர்க்கை, அனுமன், சூரியன், சந்திரன் ஆகிய தனிச் சிற்பங்களும் கோயில் தூண்களில் காளியம்மன்,இராமபிரான் போன்ற சிற்பங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.மிகவும் நேர்த்தியாகவும், ஆகமவிதிப்படியாகவும் உருவாக்கப்பட்ட விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர்,பிச்சாடனாமூர்த்தி,சந்திரசேகர், நடராஜர்,மீனாட்சி சுந்தரேசுவரர்,சுரதேவர்,பள்ளியறை சொக்கர், பள்ளியறை அம்மன், வீணாதார தட்சிணாமூர்த்தி, பிரதோஷ மூர்த்தி, சண்டிகேஸ்வரர்,சரபேஸ்வரர், ஞானம்மாள்,வள்ளி, தெய்வானை,பார்வதி, சிவகாமி, கண்ணப்பநாயனார்,வீரபாகு, மாணிக்கவாசகர் போன்ற உற்சவ மூர்த்திகளின் வடிவங்களும் இக்கோயிலில் இடம் பெற்றிருக்கின்றன. இக்கோயிலின் இராஜகோபுரம் மூன்று அடுக்குடன் 5 கலசங்களுடன் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.தற்போது ஆன்றோர்,சான்றோர் மற்றும் அருளுள்ளம் கொண்டவர்களின் இடைவிடா முயற்சியினால் திருப்பணி செய்யப்பட்டு மிகுந்த அருளுடன் காட்சியளிக்கின்றது. கால பூஜைகள் நான்கு கால பூஜைகள் 1.திருவனந்தல் 2.உச்சிகாலம் 3.சாய ரட்சை 4.பள்ளியறை நடை திறந்திருக்கும் நேரம் தினசரி காலை 7.00 மணிமுதல் 12.00 வரை மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 வரை சிறப்பு பூஜைகள் பிரதோஷ வழிபாடு,நவராத்திரி வழிபாடு, திருக்கார்த்திகை வழிபாடு,மார்கழி மாத வழிபாடுகள்,விநாயகர் சதுர்த்தி வழிபாடு மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6.00 வரை இராகு காலத்தில் இராகு, கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி வழிபாடும் சிறப்பாக நடைபெறுகின்றது. திருவிழாக்கள் ஓவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று திருத்தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. வழித்தடம் தேனி மாவட்டத்தில் மதுரை - குமுளி நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. தேனியிலிருந்து -30 கி.மீ. மதுரையிலிருந்து -110 கி.மீ. திண்டுக்கல்லிருந்து -115 கி.மீ.
