அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம் - 628206, தூத்துக்குடி .
Arulmigu Mutharamman Temple, Kulasekaranpatinam - 628206, Thoothukudi District [TM038272]
×
Temple History
தல வரலாறு
திருத்தலச் சிறப்பு :
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர் மாநகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கடற்கரை நெடுஞ்சாலையில் திருச்செந்தூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டினம் என்னும் பேரூரில் கடற்கரைக்கு அருகில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரருடன் அமர்ந்திருந்து அன்னை முத்தாரம்மன் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் பெருநகராக வளர்ச்சி பெற்றது. எனவே அந்த மாமன்னனின் பெயரால் இவ்வூர் குலசேகரபட்டினம் எனப் பின்னர் அழைக்கப்படலாயிற்று.
மூர்த்தியின் சிறப்பு :
மூர்த்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்று பொருள். இறைவன் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் நின்று காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறான். இங்கே அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். தற்போது நாம்...திருத்தலச் சிறப்பு :
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர் மாநகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கடற்கரை நெடுஞ்சாலையில் திருச்செந்தூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டினம் என்னும் பேரூரில் கடற்கரைக்கு அருகில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரருடன் அமர்ந்திருந்து அன்னை முத்தாரம்மன் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் பெருநகராக வளர்ச்சி பெற்றது. எனவே அந்த மாமன்னனின் பெயரால் இவ்வூர் குலசேகரபட்டினம் எனப் பின்னர் அழைக்கப்படலாயிற்று.
மூர்த்தியின் சிறப்பு :
மூர்த்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்று பொருள். இறைவன் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் நின்று காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறான். இங்கே அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். தற்போது நாம் வழிபடும் உருவுக்குக் கீழ் பாதத்தின் பக்கத்தில் தானே தோன்றிய சுயம்பு உருவத்தைக் காணலாம். அது சுயம்புவாகத் தானே தோன்றியது உளி கொண்டு செதுக்காதது.
இந்நகரில் அட்ட காளிகளுக்கும் (எட்டு காளிகள்) ஆலயங்கள் அமைந்துள்ளன. 1.வீரகாளியம்மன் 2.பத்ரகாளியம்மன் 3.கருங்காளியம்மள் 4.முப்பிடாரிஅம்மன் 5.முத்தாரம்மன் 6.உச்சினிமாகாளியம்மன் 7.மூன்று முகம் கொண்ட அம்மன் 8.வண்டி மறித்த அம்மன் என்று அட்ட காளிகளுக்கும் ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த அட்ட காளிகளின் முதன்மையானதாகச் சிறந்து விளங்கும் தாய் முத்தாரம்மனாகும். இந்த அம்மனைத் தரிசித்து வந்தால் தரித்திரங்கள் விலகி அனைத்து நலன்களையும் பெறுவர்.
தீர்த்தம் - சிறப்பு :
தீர்த்தங்களில் சிறந்தது கடல் தீர்த்தம். புண்ணிய நதிகள் அனைத்தும் கடலில் கலப்பதால் இதை மகா தீர்த்தம் என்பர் இத்திருக்கோயிலுக்குத் தீர்த்தத்தில் சிறந்த கடல் தீர்த்தமே தீர்த்தமாக உள்ளது. அதிலும் குறிப்பாகக் கங்கை நதி கலக்கும் வங்கக்கடல் தீர்த்தமாக அமையப்பெற்றதும் மாபெரும் சிறப்பாகும். கங்கை நதி கலப்பதால் வங்கக் கடலைக் கங்கைக்கடல் எனவும் அழைப்பர்.
கங்கையில் நீராடிக் காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக் கடலில் நீராடி அன்னை முத்தாரம்மனையும் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால் கிடைக்கிறது.
துணைக்கோயில் சிறப்பு :
இத்திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், குலசேகரன்பட்டினத்தில் வங்கக்கடல் அலைகள் முத்தமிடும் அழகிய கடற்கரைப் பக்கத்தில் கடற்கரை நோக்கி அமைந்துள்ளது. சிவகாமி அம்பாள் உடனாய சிதம்பரேசுவரரைத் தரிசிக்கும்போது தில்லையில் நடனமாடும் நடராச பெருமானைத் தரிசித்தால் கிடைக்கும் பலன் இம்முர்த்தியை வணங்கினால் கிடைக்கும் என்று இம்மூர்த்தியின் பெருமையை உணர்ந்தவர்கள் கூறுகின்றன.
இத்திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு விண்ணவரம் பெருமாள் திருக்கோயில்,குலசேகரன்பட்டினம் ஊருக்கு வடக்கு எல்லையில் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி உடனோடு அமர்ந்திருந்து விண்ணவரம் பெருமாள் பக்தர்கட்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
ஆலய வழிபாடும் பலன்களும் :
நாள் வழிபாடு : இத்திருக்கோயிலில் தினசரி 4 கால பூசை நடைபெறுகிறது. காலையில் காலசந்தியும், பகலில் உச்சிக்காலப் பூசையும், மாலையில் சாயரட்சை பூசையும் , இரவில் இராக்காலப் பூசையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மாத வழிபாடு : தமிழ்மாதக் கடைசி செவ்வாய் தோறும் மாதாந்திர விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய இரவில் அன்னை முத்தாரம்மன் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள். பௌர்ணமி தோறும் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. திருவிளக்கு வழிபாட்டில் மகளிர் பெருமளவில் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுகின்றனர்.
மார்கழி மாதம் தனுர் மாத வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இம்மாதத்தில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதிகாலை 5.00 மணிக்குத் தனுர் மாதப்பூசை நடைபெறுகிறது.
ஆண்டு வழிபாடு : சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் வருசாபிசேகம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் அபிசேக ஆராதனைகள் நடத்தப்பட்டு இரவில் அன்னை திருத்தேரில் திருவீதியுலா எழுந்தருளுகின்றாள்.
தமிழ்ப்புத்தாண்டு (சித்திரைவிசு) அன்று சிறப்பு வழிபாடுகளும், அலங்காரத் தீபராதனைகளும் நடைபெறுகின்றன. மற்றும் இரவு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
இத்திருக்கோயிலில் ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய் இரவில் முளைப்பாலிகைகளில் நவதானியங்களைத் தெளித்து அவ்வப்போது நீர்தெளித்துப் பூசை செய்து எட்டாம் நாளில் அதாவது மூன்றாம் செவ்வாய் இரவில் முளைப்பாலிகையினை மகாமண்டபத்தில் கொண்டு வைத்து அலங்காரம் செய்து சிறப்புப் பூசை செய்யப்படுகிறது. எடுத்த காரியம் இனிது நிறைவேறவும், நாடும் வீடும் செழிக்கவும் இவ்விழர நடத்தப்படுகிறது.
இத்திருக்கோயிலில் கொடை விழா ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய் நடைபெறுகிறது. இவ்விழா திங்கள்,செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இத்திருநாளில் அம்பாள் திருமுகத்தைக் குடத்து நீரில் அமர்த்தி வேப்பிலை மற்றும் பூக்களால் அலங்கரித்து மூன்று முறை கும்பம் திருவீதி எழுந்தருளிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர்க் கும்பம் திருக்கோயில் சென்றடைகிறது. திங்கள் இரவில் மாக்காப்பு, தீபாராதனையுடன் தொடங்கும் இக்கொடைவிழா புதன் மாலையில் மஞ்சள் நீராட்டுடன் நிறைவு பெறுகிறது.
தசரா பெருந்திருவிழா : தசரா திருவிழா இத்திருக்கோயிலின் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தசராத் திருவிழா கொண்டாடப்படும் ஆலயங்களில் இத்திருக்கோயில் முதன்மை இடத்தை வகிக்கிறது. நவராத்திரி விழாவே இங்குத் தசரா விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இத்தசரா விழாவிற்குப் பின்னணியாக ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவன் இருந்தான். ஒரு நாள் அவனது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத் திமிரால் அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு மட்டுமின்றி அவமரியாதையும் செய்தான். மனம் நொந்த தமிழ்ஞானி அகத்தியர் வரமுனியை எருமைதலையும் மனித உடலும் பெற்று இறைவியால் சாவாயாக எனச் சாபமிட்டுச் சென்றார்.
அகத்திய மாமுனிவரின் சாபத்தால் வரமுனி எருமைதலையும் மனித உடலும் பெற்றான் மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். தன் வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினான். அதனால் அவன் மகிசாசுரன் என அழைக்கப்படலாயினான்.
மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்திக் கடும் தவம் புரிந்து மகிசாசுரனின் இடையூறுகளை நீக்கித் தர வேண்டினர்.அவர்கள் நடத்திய வேள்வியால் ஒரு பெண் குழந்தை தோன்றியது. அது லலிதாம்பிகை என அழைக்கப்பட்டது. அந்தப் பெண் குழந்தை 9 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து 10 ஆம் நாள் அன்னைப் பராசக்தி மறுவடிவாக லலிதாம்பிகை என்ற பெயரில் மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசுரனை அழித்த 10 ஆம் நாள் தசரா என்றழைக்கப்படுகிறது. தசரா திருவிழா இத்திருக்கோயிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமை திதியில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்குகிறது. கொடியேற்றத்திற்கு பின் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். கொடியேற்ற நாளுக்கு முந்தைய இரவில் சுவாமி,அம்பாள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்குக் காப்புக் கட்டப்படுகிறது. முதல் நாள் அம்பாள் தூர்க்கை திருக்கோலத்திலும், இரண்டாம் நாள் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்திலும், மூன்றாம் நாள் பார்வதி திருக்கோலத்திலும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும் ஐந்தாம் நாள் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், ஆறாம் நாள் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், ஏழாம் நாள் ஆனந்தநடராஜர் திருக்கோலத்திலும், எட்டாம் நாள் அலைமகள் திருக்கோலத்திலும், ஒன்பதாம் நாள் கலைமகள் திருக்கோலத்திலும் வீதியுலா வருகின்றாள்.
10- ஆம் நாள் பிற்பகலில் தசமி திதியில் சுவாமி அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கும், மகிசாசுரசம்காரத்திற்குக் கொண்டு செல்லப்படும். சூலத்திற்கும் மகா அபிசேக ஆராதனைகள் செய்விக்கப்படுகிறது. அன்றைய இரவு 12.00 மணிக்குச் சிறப்புப் பூசை நடத்தப்பட்டு, மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அன்னை, சம்காரத்திற்குக் கடற்கரை சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் நோக்கிப் புறப்படுகிறாள். அன்னையுடன் அணிவகுத்துச் செல்லும் படைவீரர்களைப் போல் காளிவேடம் அணிந்த பக்தர்களும், இதர வேடம் அணிந்த பக்தர்களும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று கூறத்தக்க அளவில் கடற்கரை நோக்கிச் சென்று இலட்சக்கணக்கில் சம்காரத் திடலில் கூடுகின்றனர்.
சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்திற்கு வந்து சேரும் அன்னை முதலில் மகிசனின் தலையினையும் அடுத்துச் சிம்மத் தலையினையும், பின்னர் மகிசாசுரன் தலையினையும் கொய்து வெற்றி வாகை சூடிக் கடற்கரை மேடைக்கு எழுந்தளுகின்றாள். அன்னையின் வெற்றி வாகையினைக் கொண்டாடும் விதத்தில் இங்கு வாண வேடிக்கைகள் நடத்தப்படுகின்றன.
பின்னர் காலை வேளையில் அன்னை பூஞ்சப்பரத்தில் புறப்பட்டு வீதியுலா வருகின்றாள். காலையில் வீதியுலா புறப்பட்ட அன்னை மாலையில் திருக்கோயிலை வந்தடைந்தவுடன் பெரும் ஆரவாரத்திற்கிடையில் கொடி இறக்கப்படுகிறது. கொடி இறக்கப்பட்டவுடன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படுகின்றன. இதே வேளையில் காப்புக்கட்டிய பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் காப்புகளும் களையப்படுகின்றன. இரவில் அன்னைக்குச் சேர்க்கை அபிசேகம் நடத்தப்படுகிறது. மறுநாள் முற்பகலில் அன்னைக்குச் சேர்க்கை அபிசேகம் நடத்தப்படுகிறது. அதன் மறுநாள் முற்பகலில் அன்னைக்குப் பாலாபிசேகம் நடத்தப்பட்டுத் தசரா பெருவிழா நிறைவு பெறுகிறது.