அருள்மிகு ஜோதி விநாயகர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை - 600029, சென்னை .
Arulmigu Jothi Vinayagar Temple, Aminjikarai, Chennai - 600029, Chennai District [TM000928]
×
Temple History
தல பெருமை
திருக்கோயில் அமைவிடம்
அருள்மிகு ஸ்ரீ ஜோதி விநாயகர் திருக்கோயில் சென்னை -30 ஷெனாய் நகர் கெஜலட்சுமி காலனி முதல் தெருவில் அமைந்துள்ளது.
திருக்கோயில் ஸ்தல வரலாறு
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பெரியோரின் வாக்கு. அதன்படி 1966- ம் ஆண்டு அமைந்தகரை பெரிய கூடல் கிராமம் ஒட்டிய முதல் தெரு கஜலட்சுமி காலனி ஊர் பொதுமக்களால் குளம் அருகில் ஸ்ரீ ஜோதி விநாயகர் வைத்து மிக எளிய முறையில் கும்பாபிஷேகம் செய்து வழிபட்டனர். குளம் அருகில் முட்செடிகள் சூழ்ந்துகொண்டன 1999- ம் ஆண்டு குளம் மூடப்பட்டு ஜோதி விநாயகர் சுவாமிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு ஊர் பொதுமக்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அருள்மிகு ஜோதி விநாயகர் அருளால் 2003- ம் ஆண்டு ஸ்ரீ...திருக்கோயில் அமைவிடம்
அருள்மிகு ஸ்ரீ ஜோதி விநாயகர் திருக்கோயில் சென்னை -30 ஷெனாய் நகர் கெஜலட்சுமி காலனி முதல் தெருவில் அமைந்துள்ளது.
திருக்கோயில் ஸ்தல வரலாறு
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பெரியோரின் வாக்கு. அதன்படி 1966- ம் ஆண்டு அமைந்தகரை பெரிய கூடல் கிராமம் ஒட்டிய முதல் தெரு கஜலட்சுமி காலனி ஊர் பொதுமக்களால் குளம் அருகில் ஸ்ரீ ஜோதி விநாயகர் வைத்து மிக எளிய முறையில் கும்பாபிஷேகம் செய்து வழிபட்டனர். குளம் அருகில் முட்செடிகள் சூழ்ந்துகொண்டன 1999- ம் ஆண்டு குளம் மூடப்பட்டு ஜோதி விநாயகர் சுவாமிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு ஊர் பொதுமக்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அருள்மிகு ஜோதி விநாயகர் அருளால் 2003- ம் ஆண்டு ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயருக்கு உபயதாரர்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2006- ம் ஆண்டு பிரதான தெய்வங்களான ஸ்ரீ ஜோதி விநாயகர் ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர் ஸ்ரீ மரகதாம்பிகை ஸ்ரீ நந்திகேஸ்வரர் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஸ்ரீ கனக துர்கையம்மன் ஸ்ரீ நாகாத்தம்மன் ஸ்ரீ துர்கை ஸ்ரீ நவகிரகம் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் ஊர் பொதுமக்களால் சிறப்பாக நடைபெற்றது. 2009- ம் ஆண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் கருட பகவானுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2011- ம் ஆண்டு ஸ்ரீ ஐயப்பன், 2013- ம் ஆண்டு ஸ்ரீ ஸ்வர்ண பைரவர், 2014- ம் ஆண்டு ஸ்ரீ சீதா லட்சுமணன் ஹனுமான் சமேத ஸ்ரீ கோதண்டராமர் சுவாமி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகிய சன்னதிகளுக்கும், 2017- ம் ஆண்டு ஸ்ரீ மகா பிரத்யங்கரா தேவி, 2018- ம் ஆண்டு ஸ்ரீ சாய்பாபா ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு தனி தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு நூதன அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் ஊர் பொதுமக்களால் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கோயில் தலவிருட்சம்
இத்திருக்கோயில் ஸ்தல விருட்சம் அரசமரம் ஆகும்.
திருக்கோயில் பூஜைகள்
இத்திருக்கோயிலில் இரண்டு கால நித்திய பூஜைகள் நடைபெறுகிறது.
மாதாந்திர பூஜைகள்
சங்கடஹர சதுர்த்தி- ஸ்ரீ ஜோதி விநாயகர் சுவாமிக்கு மாலை 6.00. மணி அளவில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
கிருத்திகை பூஜை- கிருத்திகை நட்சத்திரம் நாளில் ஸ்ரீ வள்ளிதேவ சேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிக்கு காலை 7.00 மணி அளவில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
பிரதோஷ பூஜை- ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஸ்ரீ மரகதாம்பிகை ஸ்ரீ நந்திகேஸ்வரர் சுவாமிகளுக்கு மாலை 4.00 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.
ராகு கால யாக பூஜை- ஸ்ரீ நாகாத்தம்மனுக்கு பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு ராகு கால யாக பூஜை நடைபெற்று மகா தீப ஆராதனை நடைபெறும். மதியம் 12.00 மணி அளவில் சமபந்தி போஜனம் நடைபெறும். ஆயில்யம் நட்சத்திரம் நாளில் ஸ்ரீ நாகாத்தம்மனுக்கு காலை 7.00 மணி அளவில் பாலபிஷேகம் ஆராதனை நடைபெறும்.
அமாவாசை பூஜை- ஸ்ரீ பிரத்யங்கரா தேவிக்கு மாலை 6.00 மணி அளவில் மகா யாகம் நடைபெற்று உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.
தேய்பிறை அஷ்டமி பூஜை- ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் சுவாமிக்கு மாலை 6.30 மணி அளவில் அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.
வருடாந்திர திருவிழாக்கள்
சித்திரை மாதம்- ஸ்ரீ கனக துர்க்கை அம்மனுக்கு சித்ரா பௌர்ணமி அன்று காலை 6.00 மணி அளவில் கோபூஜை 7.00 மணி அளவில் கணபதி ஹோமம் 11.30 மணி அளவில் சிறப்பு கனிகள் அபிஷேகம் மாலை 4.00 மணி அளவில் சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் பூச்சொரிதல் நடைபெறும்.
வைகாசி மாதம்- ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு விசாக நட்சத்திரம் அன்று காலை 9.00 மணி அளவில் பால் பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடைபெறும்.
ஆனி மாதம்- ஸ்ரீ மகா பிரத்யங்கரா தேவிக்கு பூரம் நட்சத்திரம் அன்று காலை 10.00 மணி அளவில் வருட அபிஷேகம் விழா சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஹோம பூஜையுடன் நடைபெறும்.
ஆடி மாதம்- ஸ்ரீ நாகாத்தம்மனுக்கு ஆடி முதல் வார ஞாயிறுக்கிழமை சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் காலை 11.00 மணி அளவில் கஞ்சி வார்த்தல் நடைபெறும். மாலை 6.00 மணி அளவில் கும்பம் படையல் ஆராதனை நடைபெறும். ஸ்ரீ கனக துர்க்கை அம்மனுக்கு திருவாடிப்பூரம் அன்று மாலை 6.30 மணி அளவில் சிறப்பு வளையல் அலங்காரத்தில் ஆராதனை நடைபெறும்.
ஆவணி மாதம்- ஸ்ரீ ஜோதி விநாயகர் சுவாமிக்கு சதுர்த்தி அன்று காலை 6.00 மணி அளவில் கோ பூஜையும் 7.00 மணி அளவில் கணபதி ஹோமம் நடைபெற்று சிறப்பு அபிஷேகத்துடன் வெள்ளிக்கவசத்தில் மகா தீப ஆராதனை நடைபெறும். அன்று மாலை 5.00 மணி அளவில் சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் தீப ஆராதனை நடைபெற்று இரவு 8.00 மணி அளவில் சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெறும்.
புரட்டாசி மாதம்- ஸ்ரீ கனக துர்க்கை அம்மனுக்கு நவராத்திரி பத்து நாட்கள் திருவிழாவை முன்னிட்டு அன்று மாலை 6.00 மணி அளவில் சந்தன காப்பு அலங்காரத்தில் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்று மகா தீப ஆராதனை நடைபெறும். ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சுவாமிக்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் காலை 6.00 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். சனிக்கிழமை நான்காவது வாரம் திருவிழாவை முன்னிட்டு மாலை 6.00 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் மகா லட்டு நெய்வேத்தியம் ஆராதனை நடைபெறும். அன்று இரவு 8.00 மணி அளவில் சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெறும்.
ஐப்பசி மாதம்- ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் சுவாமிக்கு பௌர்ணமி அன்று மாலை 5.00 மணி அளவில் அன்ன அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெறும். ஸ்ரீ வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஏழாம் நாள் மாலை 6.00 மணி அளவில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறும்.
கார்த்திகை மாதம்- ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் சுவாமிக்கு திங்கட்கிழமை நான்காம் வாரம் ஹோம பூஜையுடன் 108 சங்காபிஷேகம் நடைபெறும். ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் சுவாமிக்கு கார்த்திகை தீபம் அன்று மாலை 5.30 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா ஜோதி தீபம் ஏற்றப்படும்.
மார்கழி மாதம்- ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேய சுவாமிக்கு ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு காலை 9.00 மணி அளவில் வடைமாலை அலங்காரத்தில் மகா தீப ஆராதனை நடைபெறும்.
தை மாதம்- அனைத்து சுவாமிகளுக்கும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் பசுமாட்டிற்கு மாட்டுப்பொங்கல் அன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோ பூஜை நடைபெறும்.
மாசி மாதம்- ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் சுவாமிக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.
பங்குனி மாதம்- ஸ்ரீ சீதா லட்சுமணன் ஹனுமான் சமேத ஸ்ரீ கோதண்டராமர் சுவாமிக்கு ஸ்ரீ ராமநவமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். ஸ்ரீ வள்ளிதேவ சேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 8.00 மணி அளவில் பால்குடம் அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.
சிறப்பு யாக பூஜை- ராகு கேது குரு சனி பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கோயில் நடை திறப்பு
திங்கள் புதன் வியாழன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை திறந்திருக்கும்.
செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை மாலை 3.00 மணி முதல் 8.30 மணி வரை திறந்திருக்கும்.
வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கோசாலை- இத்திருக்கோயிலில் கோசாலை உள்ளது