திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும். திருக்கழிப்பாலை தலத்தில் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வான்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரி என்றும் திருநெல்வாயில் என்றும் வழங்கும் மற்றொரு சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.