அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயில் பெருமுக்கல், மரக்காணம். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் பொருமுக்கல் முக்தியாலேஸ்வரர் கோயிலின் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டதில் இத்திருக்கோயில் கி.பி 13, 14- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த சோழர் காலக் கற்கோயில் என்பதனை இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் கட்டடக் கலையின் வாயிலாக அறிய முடிகிறது. தொன்மை மிக்க கல்வெட்டுக்களையும் அழகிய கட்டடக்கலையையும் பெற்றுத் திகழும் இத்திருக்கோயில் தற்போது முற்றிலுமாக சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றது. சோழர் கால கல்வெட்டுகளில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மா நாடான விஜயராஜேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கை கொண்ட நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.