அருள்மிகு செங்கழுநீர் பிள்ளையார் திருக்கோயில் 500 ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த திருக்கோயிலாகும். சிகப்பு அல்லி மலர்கள் நிறைந்த திருக்குளக்கரையில் அமைந்ததினால் இத்திருக்கோயில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் செங்கழுநீர் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயிலில் அருள்மிகு செங்கழுநீர் பிள்ளையார் சித்தி, புத்தி எனும் இரு துணைவியருடன் காட்சியளிக்கிறார். எடுத்த காரியம் எளியதாக இனிதாக நிறைவேற்றி வைக்கின்ற ஆற்றல் கொண்டவர் இப்பிள்ளையார் என பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஈசனை போல் இப்பிள்ளையாரும் சித்தி, புத்தி சமேதராக தென்திசை நோக்கி காட்சியளிப்பது பெரும் விசேஷமாகும். இத்திருக்கோயிலில் சிவ ஆகமப்படி பூஜை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.