கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக திகழும் புலியூர் என்பது பண்டையக்காலத்தில் கோடலம் பாக்கத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருந்த ஒரு பெரும் ஊராகும். மத்தியந்தினர் என்னும் ஒரு பெரும் முனிவருக்கு தவப்புதல்வரான மழ முனிவர் என்பவர் கல்வியின் பயன் கடவுளை வழிபடுதலும், இறைவன் அருளைப் பெறுதலும் என உணர்ந்தார். அவர் இறைவனிடம் அடியேன் நுமக்கு ஏற்ற இனிய எழில் மலர்களைப் பறித்துப் பூஜை செய்வதற்கு பயன்படும் வகையில் அடியேனுடைய கையும் காலும் புலியைப் போல வலிமையான நகங்களைப் பெறவும், அவைகளில் காணும் திறன்மிக்க சிறந்த கண்கள் அமைய பெறவும் திருவருள் சுரந்தருள்க எனப் பணிந்து வேண்டினர். இறைவனும் அதற்கு இசைந்து அவ்வாறே அளித்து அருளினன். இங்ஙனம் மலர் பறித்துச் சாத்தி இறைவனை வழிபடுதற்பொருட்டுத் தம் கை...