ஆழிசூழ் இப்புவியுலகில் உயிர்களை எல்லாம் காத்திடும் பொருட்டு பல்வேறு உருவங்களில் இறைவன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். புராண தொன்மை, சங்ககாலச் சிறப்பு, வரலாற்று முக்கியத்துவம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற அதியமான்கோட்டை எனும் அழகிய ஊரில் அதியன் மண்ணின் அற்புதமாக விளங்கிவரும் திருத்தலம்தான் அருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமி திருக்கோயில் ஆகும். இங்கு அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி உடனுறைந்தவராய் அன்பர்கள் தன்னை நாடி வேண்டாத பொழுதும், தானே அவர்களைத் தேடிச் சென்று காக்கும் பெருமாளாக (சென்று ஆயப்பெருமாள்) சென்றாயப்பெருமாள் எனும் திருநாமம் கொண்டு இறையன்பர்களுக்காக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் மன்னர்கால மரபு ஓவியங்கள் இத்திருக்கோயில் உட்புறமண்டபத்தின் விதானத்திலும், பக்கச்சுவர்களிலும் தீட்டப்பட்டு, இத்திருக்கோயிலின் பழம்பெரும் கலைச்சிறப்புக்கான...