அருள்மிகு பிரகதீஸ்வரசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் - 613001, தஞ்சாவூர் .
Arulmigu Pragadheeswarar Temple, Thanjavur - 613001, Thanjavur District [TM013968]
×
Temple History
தல வரலாறு
தமிழகம் மட்டுமன்றி தென் இந்தியாவின் பல மாநிலங்களின் பகுதிகளையும் தமதாகக் கொண்டுத் திகழ்ந்த சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய திருவூர் தஞ்சாவூராகும். கி.பி. 1003-1010 ஆண்டுகளில் இராசராசேசுரம் என்னும் பெருவுடையார் திருக்கோயில் கட்டப்பட்டது. மாமன்னன் இராசராச சோழன் தஞ்சை நகரில் எடுத்த மாபெரும் சிவாலயம்தான் இராசராசேசுரம் என்னும் பெருவுடையார் கோயிலாகும். உலக கட்டிட கலை வல்லுநர்களால் வியந்து பாராட்டப்பெரும் இவ்வாலயம் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பெற்ற ஒன்றாகும். கட்டிடக்கலை, சிற்பம், செப்புத்திருமேனிகள், ஓவியப்படைப்புகள், இசை, நாட்டியம், நாடகம் எனப் பல்வேறு கலைப்படைப்புகளும் ஒன்றாக சங்கமித்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் எண்ணற்ற கல்வெட்டு சாசனங்களை சுமந்து ஒரு வரலாற்று பெருநூலாகவும் காட்சி நல்குகின்றது. தஞ்சை பெருவுடையார் கோயிலின் கட்டிட...தமிழகம் மட்டுமன்றி தென் இந்தியாவின் பல மாநிலங்களின் பகுதிகளையும் தமதாகக் கொண்டுத் திகழ்ந்த சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய திருவூர் தஞ்சாவூராகும். கி.பி. 1003-1010 ஆண்டுகளில் இராசராசேசுரம் என்னும் பெருவுடையார் திருக்கோயில் கட்டப்பட்டது. மாமன்னன் இராசராச சோழன் தஞ்சை நகரில் எடுத்த மாபெரும் சிவாலயம்தான் இராசராசேசுரம் என்னும் பெருவுடையார் கோயிலாகும். உலக கட்டிட கலை வல்லுநர்களால் வியந்து பாராட்டப்பெரும் இவ்வாலயம் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பெற்ற ஒன்றாகும். கட்டிடக்கலை, சிற்பம், செப்புத்திருமேனிகள், ஓவியப்படைப்புகள், இசை, நாட்டியம், நாடகம் எனப் பல்வேறு கலைப்படைப்புகளும் ஒன்றாக சங்கமித்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் எண்ணற்ற கல்வெட்டு சாசனங்களை சுமந்து ஒரு வரலாற்று பெருநூலாகவும் காட்சி நல்குகின்றது. தஞ்சை பெருவுடையார் கோயிலின் கட்டிட அமைப்பு பல்வேறு தத்துவங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஸ்ரீவிமானத்தின் தோற்றம் மகா சதாசிவ லிங்க வடிவமாகும். அதனால்தான் கோஷ்டங்களில் தத்புருஷமூர்த்தி, அகோர மூர்த்தி, சத்யோஜத மூர்த்தி, வாமதேவ மூர்த்தி, ஈசான மூர்த்தி ஆகிய சிவனாரின் ஐந்து வடிவங்கள் காண பெருகின்றன. தூரத்திலிருந்து இக்கோயிலின் நெடிதுயர்ந்த ஸ்ரீவிமானத்தை காணும் போது அதனை வெறும் கட்டிடமாக கருதக் கூடாது. அது மகாசதாசிவ லிங்கம் என உணருதல் வேண்டும். சதாசிவ லிங்கமாக கருதபெறும் இவ்விமானம் மகாமேறு தத்துவமாகவும், நிலம், காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் மூன்று தத்துவங்களை காட்டுவதாகவும் அமைந்து விளங்குகின்றது. இராஜகோபுரங்கள் இரண்டும் தீ மற்றும் நீர் என்னும் தத்துவங்களை எடுத்துறைப்பனவாக அமைந்துள்ளன.
தஞ்சை கோயிலில் ஆறு வாயில்கள் உள்ளன. திருமூலட்டானத்தில் திகழும் இலிங்கத்திருமேனியின் நேர்கோட்டு பார்வையில் இராசராசன் திருவாயில், நந்தி திருவாயில், பலிபீடம், கேரளாந்தகன் திருவாயில் ஆகியவை உள்ளன. தஞ்சைக் கோயிலின் ஆறு வாயில்களும், இராஜராஜேஸ்வரமுடைய பரமசுவாமி ருத்ரமூர்த்தி, சந்தியா நிருத்தமூர்த்தி, (மூலலிங்கம்) மனோன்மனி, ஆடல்வல்லான் ஆகிய தெய்வங்களின் பார்வைக்குரிய வாயில்களாகவே மகுடாகம அடிப்படையிலும், மகாசாயிகா பதவிந்யாச அடிப்படையிலும் வகுக்கப்பெற்றவை என்பதை அரிய முடிகிறது.
சாந்தார அமைப்போடு இரண்டடுக்கு கட்டுமானம்:
உபபீடத்தில் இருந்து பிரஸ்தரம் வரை உட்பகுதியில் கட்டுமான அமைப்பு முறை புதுமையானதாகவும் மேல்தளங்களுக்கு மிகவும் வலுவூட்டும் வண்ணமும் அமைந்துள்ளது. மகாதுவாரம் என்னும் வாயிற்பகுதியில் பக்க அறைகள் எவ்வாறு ஒன்றின் மேல் ஒன்றாக விளங்குகின்றனவோ அவை போன்றே அடித்தளக் கட்டுமானமும் இரு அடுக்குடையதாகும். உட்சுவர், புறச்சுவர் இவைகளக்கிடையே சாந்தாரம் எனும் சுற்று அறை ஆகியவை தரை மட்டத்திலும், மேல் நிலையிலும் உள்ளன. இவ்வகைச் சுற்று அறை அமைப்புகளுடன் கூடிய அடித்தள அமைப்பினைப் பிற்காலச் சோழர்கள் கோபுரங்களிலோ, விசயநகர அரசு காலத்து கோபுரங்களிலோ காண முடியாது. மிகத்தேர்ந்த கட்டுமான நுட்ப கூறுகள் பலவற்றை இக்கட்டிட அமைப்பில் காண முடிகிறது.
தஞ்சை பேரியகோயிலில் விமான அடித்தளம் எவ்வாறு உள் நான்கு சுவர்கள், வெளி நான்கு சுவர்கள் அவைகளுக்கிடையே சாந்தாரம் எனும் சுற்று அறை என இரு அறை முறையில் விளங்குகின்றதோ அது போன்றே இக்கோபுர கட்டுமானமும் உள்ளது. இதனால் கோபுரத்தின் தாங்கு திறன் அதிகரிப்பதோடு அடித்தளத்தில் விரிசல் ஏற்பட்டு முழுகட்டுமானமும் சிதையும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படுகின்றது.
இந்த கோபுரத்தின் கீழ்தளத்திலுள்ள சுற்று அறை கோயிலின் பிரதான கதவு மூடப்பட்டு இருக்கும் போது பணியாளர்கள் உள்ளே செல்லும் வழியாகப் பயன்பட்டிருக்கிறது. இங்குப் பக்க சுவர்களில் பல காணிகள் இருப்பதால் அங்கு வெளிச்சமும் காற்றோட்டமும் மிகுந்த அளவில் கிடைக்கின்றன.
முழுவதும் கருங்கற் கொண்டு இரு அடுக்கு முறை கட்டுமானமாகவே பிரஸ்தரம் வரை கட்டப்பெற்றுள்ள இராசராசன் காலத்துத் தொழில்நுட்பம் பிற்காலச்சோழர்கள் அமைத்த கோபுரங்களில் கூட பின்பற்றப்படவில்லை.
மகுடாகமம்:
தமிழகத்திலுள்ள சிவாலயங்களை 28 சைவ ஆகமங்கள் அடிப்படையிலோ அல்லது அதன் உபாகமங்கள் எனப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அடிப்படையிலோ அமைப்பது மரப்பாகும். 28 மூலாகமங்கள் குறிப்பிட தக்க சிறப்பு வாய்ந்தது மகுடாகமமாகும். திருமூலர் தன் திருமந்திரத்தில் மகுடாகமத்தின் சிறப்புகளை எடுத்து கூறியுள்ளார். மகுடாகமத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பெற்றதே தஞ்சை பெருவுடையார் கோயிலாகும். இராசராசன் இக்கோயிலினை மகாமேரு (வான் கயிலாயம்) என்றும் தச்சினமேரு (தென்னாட்டு மலை) என்றும் கல்வெட்டுகளில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மகாமேரு பருவதத்தைச் சுற்றி ஐந்தடுக்கு சுற்றுகளான பஞ்ச ஆவர்ணங்கள் உள்ளதாகவும் அவற்றில் பல்வேறு தெய்வங்கள் நின்று அவற்றை காப்பதாகவும் கூறுகின்றனர்.
பெரிய கோவில் முதலாம் இராஜராஜனின் நினைவாக ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வமைப்பில்தான் தஞ்சை பெரியகோயில் திகழ்கின்றது. இக்கோயிலுக்கு கேரளாந்தகன், இராசராசன், திருஅணுக்கன் என துவாரபாலகர்களால் பாதுகாக்கப்படும் மூன்று முக்கிய நுழைவாயில்கள் உள்ளன. சேர மன்னனை வெற்றி கொண்டதை நினைவுகூரும் வகையில் 90 அடி உயரம் கொண்ட பிரதான நுழைவாயில் கேரளாந்தகன் திருவாயில் என்றழைக்கப்படுகிறது. இரண்டாவது நுழைவாயில் இராசராசன் திருவாயில் என்றழைக்கப்படுகிறது. திருக்கோயில் வளாகத்தின் வடக்கே திரு அனுக்கம் நுழைவாயில் உள்ளது. 216 அடி உயரம் உடைய ஸ்ரீவிமானம் மகாமேரு பர்வதமாக வடிக்கப்பெற்றுள்ளது. அதன் கீழ்திசை சிகரத்தில் சிவபெருமான் உமாதேவி திருக்குமாரர்கள் பிற தெய்வங்கள் ஆகியோரின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. உயர்ந்த இம்மலையின் நான்கு திசைகளிலும் பீடத்திலிருந்து முன்னோக்கி பிதுக்கம் பெற்ற கட்டிடம் அமைப்புகள் காணப்பெறுகின்றன.
அருள்மிகு கணபதி சன்னதி
தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியின் ஆட்சி காலத்தில் தென்மேற்கு மூலையில் கணபதி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மராட்டிய பாணியில் அமைந்த பெரிய கணபதி திருமேனி உள்ளது. சன்னதிக்கு செல்லும் படிகளில் திருக்கோயிலுக்கு செய்வித்த திருப்பணி குறித்த தகவல்களை மராத்திய மொழியில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. அருள்மிகு கணபதி சன்னதியின் பக்கவாட்டில் தெற்கு, மேற்கு, வடக்கு பகுதியில் கல்வெட்டுகள் உள்ளன. இவை மராட்டிய மன்னர்கள் திருக்கோயிலுக்கு செய்வித்த திருப்பணி, அளித்த கொடைகள், முக்கிய தீர்வைகளை குறிப்பிடுகின்றன.
அருள்மிகு சுப்ரமணியரின் சன்னதி
வடமேற்கு மூலையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியரின் சன்னதி 45 சதுர அடி தளத்தில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. சுப்ரமணியர் ஆறு முகங்களுடன் கருவறையில் மயிலின் மீது சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். தேவியைச் சுற்றியுள்ள தெய்வம், திருவாசி, மயில் அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை. தெய்வத்தின் இரு முனைகளிலும் அவரது மனைவிகளான வள்ளி மற்றும் தேவசேனாவின் சிற்பங்கள் உள்ளன. முழு சன்னதியும் அலங்காரமாக செதுக்கப்பட்ட சிற்பம் மற்றும் அற்புதமான விவரங்களில் ஒரு கலைப் படைப்பாகும். இவ்வாலயத்தில் அருணகிரிநாதரின் மூன்று பாசுரங்கள் பாடியுள்ளார்.
அருள்மிகு பிரஹன்நாயகி சன்னதி
கோயிலின் பிரதான முற்றத்தில் உள்ள பிரஹன்நாயகி தேவியின் சன்னதி பாண்டிய மன்னர்களால் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஏழு அடிக்கு மேல் அளவு மற்றும் அமைதியான கம்பீரத்தையும் கருணையையும் வெளிப்படுத்துகிறது. தேவி தனது இரண்டு மேல் கரங்களில் அர்க்கிய மாலையையும் தாமரையையும் ஏந்தியவாறும், இரண்டு கீழ் கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள்.
திருச்சுற்று மாளிகை
இரண்டாம் சரபோஜி மன்னர் வீரசிங்கம் பேட்டையில் என்ற கிராமத்தில் அமைந்திருந்த ஆயிரத்தளியின் எச்சங்களாக இருந்த லிங்கங்களில் நல்ல நிலையில் இருந்த 252 லிங்கங்களை கொண்டு வந்து 1801-ஆம் ஆண்டு திருச்சுற்று மாளிகையில் (பிரகாரம்) பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.