திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் அருகில் ஆதியூர் வெள்ளியம்பதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் அருளும் முப்பெரும் தேவியரும் ஒரே சன்னதியில் ஓருருவாகிப் பத்ரகாளியாக வீற்றிருப்பதும், மண்ணாலான மூன்று அருவுருவங்களாய்த் தனித்தனியே வீற்றிருப்பதும் தமிழகத்தில் வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும். சிரசில் அக்கினிச் சுவாலையுடன், வலது காலை மடித்துப் பீடத்தில் இருத்தியவாறு, இடது காலைத் தொங்கவிட்டு மஹிசாசுரன் மீது ஊன்றியவளாய், வலது மேல் கரத்தில் ஏந்திய திரிசூலத்தை மஹிசாசுரன் மீது ஊன்றியவளாய், மற்ற கரங்களில் உடுக்கை, வாள், அசுரசிரசு, எரியகல், கேடயம், மணி, கபால பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியவளாய் உருவம் கொண்டு, வீராசனத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து தன்னை நாடி வரும்...