அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் முத்துப்பேட்டை எனும் ஊருக்கு அருகாமையில் உள்ள கோவிலூர் எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். முத்துப்பேட்டை, அலையாத்திக் காடுகளும் லகூன் எனப்படும் கடற்ப்பகுதியும் இணைந்த சுற்றுலாத்தலமாகும். பாடல் பெற்ற பழம் பெருமை வாய்ந்த 274 சிவத்தலங்களுள் ஒன்று. திருஞானசம்பந்தரின் பாடல் பெற்றது. காவிரி தென்கரை தலங்களுள் 107 வது தலம். இத்திருக்கோயில் ராமயணத்துடன் தொடர்புடைய ஒன்றாகும். இத்தலத்தின் முற்காலப்பெயர் திரு உசாத்தானம். தமிழில் உசாவுதல் என்றால் விசாரித்தல்,கேட்டறிதல் எனப்பொருள். இராமபிரான் இத்தலம் வந்து இலங்கைக்கு பாலம் அமைக்கும் வழிமுறைகளை உசாவியதால் இத்தலம் திரு உசாத்தானம் என பெயர்பெற்றது. சிவபெருமான் இராமனுக்கு மந்திரோபதேசம் அளித்து இலங்கை செல்ல வழிகாட்டியமையால் மந்திரபுரீஸ்வரர் எனப்பட்டார். இத்தலத்துக்கு இராமாயணத்துடன்...