அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், துக்காச்சி, நாச்சியார்கோயில் வழி, கும்பகோணம் வட்டம். கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. துக்காச்சிக்கு அருகிலுள்ள கூகூரில் திகழும் ஆதித்தேஸ்வரம் என்னும் சோழர்கால சிவாலயம் தற்போது ஆம்ரவணேஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்பெறுகின்றது. அவ்வாலயத்தில் காணப்பெறும் முதலாம் இராஜராஜசோழனின் 7ஆம் ஆண்டு (கி.பி.992) கல்வெட்டு சாசனம் 14 ஆண்டு (கி.பி.999) சாசனம், 15 ஆண்டு (கி.பி.1000) சாசனம் ஆகியவை துக்காச்சி என்னும் இவ்வூரினை விடேல் விடுகு துக்காச்சி சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடுகின்றன. இச்சான்று கொண்டு நோக்கும்போது பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி.730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்ற பெயரில் துக்காச்சி அழைக்கப்பெற்றது என்பதறிகிறோம். சதுர்வேதி மங்கலம் என்பது நான்கு வேதங்களும் படித்து புலமை பெற்ற அந்தணர்கள்...