காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் ஒன்று திருவெண்காடாகும். ஆதி சிதம்பரம் என்றழைக்கப்பெறும் இத்தலம் வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறும் சிறப்புடையது. சோழநாட்டுத் திருப்பதிகம் பெற்ற காவிரி வடகரையில் 11-வது ஸ்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையால் பெருமைகளை உடையது. ஸ்ரீசுவேதாரணியேசுவரர், ஸ்ரீநடராஜப்பெருமான், ஸ்ரீஅகோரர் என்று மூன்று மூர்த்திகள், சோம, சூரிய, அக்கினி என்ற மூன்று தீர்த்தங்கள், வடலால், கொன்றை, வில்வம் என்ற மூன்று தல விருட்சங்கள் எனத் தனிச்சிறப்புடைய ஸ்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நால்வரும் இத்தல இறைவன் பேரில் தேவாரத் திருப்பதிகங்கள் அருளியுள்ளனர். திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் இத்தலத்தில் பிறந்து வாழ்ந்தவர்....