மயிலாடுதுறை நகரில் காவிரி நதியின் வடகரையில் ஒருபகுதியாக அமைந்துள்ளது திருவிழந்தூர். இதன் புராணப்பெயர் திருந்தளூர். கன்னித்தமிழ்பாடி இறைவனை வாழ்த்திய ஆழ்வார்கள் பலர் வாழ்ந்த தமிழ்த்திருநாட்டில் கங்கையிற் புனிதமாகிய காவிரி கரையிலமைந்த வைணவத்தலங்கள் பலவற்றுள் ஐந்து அரங்கள்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவைகள் முறையே திருவரங்கப்பட்டினம் (மைசூரிலுள்ளது), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), அப்பாலரங்கம் (கோயிலடி), (திருக்காட்டுவள்ளி அருகிலுள்ளது), கும்பகோணம் மத்தியரங்கம், திருஇந்தளூர் பரிமளரங்கம் என்பன. திருஇந்தளூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பாஞ்சராத்திர ஆகமத்தைச் சேர்ந்தது. ஆழ்வார்களின் அருளிச்செயல்களிலும் இவ்வூருக்கு திருவிந்தளூர் (திருஇந்தளூர்) என்று பெயர். இத்தலம் சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக்காடுகள் நிறைந்திருந்ததால் சுகந்தவனம் என்ற பெயரும் உண்டு. இந்து என்ற சொல் இந்திரனைக்குறிக்கும். தட்சனின் சாபத்தால் சந்திரனுக்கு கொடிய...