பூர்வகாலத்தில் உரோமரிஷி என்பவர் தண்டகாரண்யத்தில் சிவபூஜையின் பலன்களைப்பற்றியும், சைவ நெறிகளைப் பற்றியும் அங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துக் கூறினர். அப்போது அவ்விடத்திருந்த மிருகண்டு முனிவர், உரோமரிஷி சொல்வதைக் கவனியாமல் வேறெங்கோ மனதைச் செலுத்தியிருந்தனர். அதனைக்கண்ட உரோமரிஷி, சைவ நெறியைக் கேளாமல் இருந்த நீர், விலங்காக மாறக்கடவது என்று சபித்தனர். சாபம்பெற்ற மிருகண்டு முனிவர் புலியாக உருமாறினர். பிறகு தனது தவறுக்கு வருந்தி, சாபவிமோசனமளிக்குமாறு வேண்ட, உரோமரிஷி, தென்திசையில் சேயாற்றின் அருகேயுள்ள வில்வாரண்யத்தில் சுயம்புரூபமாய் எழுந்தருளியுள்ள பெருமானைப் பூசித்துச் சாபநீக்கம் பெறுக என்றருளினர். அவ்வாறே அப்புலியானது பல ஆரண்யங்களைக் கடந்து தென்திசைவந்து சேயாற்றின் தென்பாலிருக்கும் வில்வவனத்தை அடைந்தது. அவ்விடத்தே சுயம்புரூபமாய் எழுந்தருளியுள்ள பெருமானைக்கண்டு, வலம்வந்து வணங்கி, பக்தியுடன் பலநாள் பூசித்திருந்தது. அப்போது தன் எதிரில் வலிய வந்த...