இத்திருக்கோயில் பல்லவ குல சிற்றரசனாகிய கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1229-1278) காலத்தில் கட்டப்பட்டது. நடராஜ பெருமான், வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களுக்கு ஆனந்த தாண்டவம் காட்சி தரும் வேளையில், தில்லைக்காளிக்கும் நடராஜருக்கும் நடன போட்டி ஏற்பட்டது. நடராஜ பெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடி தில்லைக்காளியை தோற்கடித்தார். சினம் கொண்ட காளி தில்லையின் வடஎல்லையில் எல்லைக்காளியாக அமர்ந்தாள். எல்லை காளியானவள், பிரம்மனது பூஜைக்கு உகந்து சாந்த சொரூபம் கொண்டு ஸ்ரீ பிரம்ம சாமுண்டிஸ்வரி என்னும் பெயருடன் எழுந்தருளினாள். கோபம்,பகைமை, பில்லி, சூனியம் நீங்க ஸ்ரீ தில்லைக்காளியையும், கல்வி, செல்வம் போன்ற ஐஸ்வர்யங்கள் பெற ஸ்ரீ தில்லையம்மனையும் வழிபடுவது தனிச்சிறப்பு.