நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, இரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம். கோபுரத்திற்கு கீழே கால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன....