அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 46 வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் அரிதிலும் அரிதான சதுர்முக விமானத்துடன் அமையப்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலம் மதுரையிலிருந்து மேலுார் செல்லும் சாலையில் யா.ஒத்தக்கடை என்ற இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்தில் மாணிக்கவாசகர் உதித்தருளிய திருவாதவூர் செல்லும் சாலையில் திருமோகூர் என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. மதுரைக்கு வடகிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் துாரத்தில் திருமோகூர் ஆலயம் வயல்சூழ்ந்த இடத்தில் வானளாவிய கோபுரத்துடன் வனப்புறக் காட்சியளிக்கிறது. புராணங்களில் இந்த இடம் மோகனஷேத்திரம் என்று போற்றப்படுகிறது. பிரம்மாண்ட புராணம் , மாத்சிய புராணம் ஆகிய இரண்டும் இத்தல பெருமையை விளக்குகின்றன. திருப்பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து...