தென்திருப்பேரை என்பது 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் ஒன்றிருப்பதால் இத்தலத்தை தென்திருப்பேரை என்று அழைத்தனர்.[1] இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறான். இறைவன் பெயர்கள்: மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். இறைவி பெயர்கள்: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்; தீர்த்தம் : சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மகர தீர்த்தம் ஆகியன....