தொண்டை நாட்டில் அமையப்பெற்றுள்ள, திருப்போரூர் எனும் தொன்மையான, இத்தலம் அறுபடை வீடுகளுக்கு ஒப்பான புகழ்பெற்ற திருத்தலமாகும். இத்தலம் சமரபுரி, போரியூர், யுத்தபுரி, செருவூர், போரிநகர், சமரப்பதி எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மீனாட்சியம்மன் அருள்பெற்ற தவஞானி சிதம்பரசுவாமிகள், பனங்காடாய் கிடந்த இப்பகுதியில் இத்திருக்கோயிலை நிர்மாணித்துள்ளார். இத்திருக்கோயிலின் அருகில் இருந்த வள்ளையார் ஓடை திருக்குளமாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இக்குளம் வற்றாத பெருமையுடையது. அருகில் உள்ள கண்ணுவர்ப்பேட்டையில் சிதம்பர சுவாமிகள் திருமடம் உள்ளது. சிதம்பரசுவாமிகள் இத்திருக்கோயில் முருகர் மீது பாடிய 726 பாடல்கள் திருப்போரூர் சந்நிதி முறை என போற்றப்படுகிறது. தலச்சிறப்பு :- அருள்மிகு கந்தசுவாமி, வள்ளி, தெய்வானை மூலவர்கள் மூவரும் சுயம்பு வடிவினர். மூலவருக்கு அபிஷேகம் எதுவும் நடைபெறுவதில்லை. புனுகுச்சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது. மூலவர்...