வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகில் "மாயோன் மேய காடுறை உலகமும்; சேயோன் மேய மைவரை உலகமும்; வேந்தன் மேய தீம்புனல் உலகமும்; வருணன் மேய பெருமணல் உலகமும்…" எனத் தொல்காப்பியம் நிலங்களுக்குரிய தெய்வங்களாக வகுத்துக் காட்டுகிறது.இதனடிப்படையில் முன்னோர் உள்ளக்கிடக்கையின் மரபுவழி எச்சங்களாகவும், வரலாற்றுப் பெட்டகங்களாகவும் நிலைபெற்றுள்ள திருக்கோயில்கள் மற்றும் அதன் பண்பாட்டு அசைவுகளைக் காக்கும் பொருட்டு திருக்கோயில் நிர்வாக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இத்துறை ஏற்படுத்தப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இருந்தே தமிழக கோயில்கள் அரசின் ஆளுகையின் கீழ் இருந்துவருகிறது. இந்து சமயத் திருக்கோயில்களுக்குத் தொன்றுதொட்டு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் இருந்து வந்துள்ளன. கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் இருந்தே இவற்றை நிர்வாகம் செய்வதில் குறிப்பிட்ட சில சமூகச் சீர்கேடுகள் மிகுந்து காணப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அப்போது ஆட்சி செய்த மன்னர்களிடமும், கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திடமும் இது தொடர்பாக பொதுமக்கள் ஏராளமான புகார்களைக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் 1817-ல் முதல்முறையாக மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது.