ஆழ்வார்களும், நாயன்மார்களும், அருளாளர்களும், துறவிகளும் தாங்கள் சென்ற இடமெல்லாம் இறைவனைப் போற்றிப் பாடி வணங்கியுள்ளனர். அத்தகைய அருளாளர்கள் அருளியதேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஆகியவை பக்தியை போற்றி வளர்த்ததோடு, தெய்வத் தமிழ் மொழியும் செழித் தோங்கிட துணையாக அமைந்துள்ளன.
திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீர் ஆங்காங்கே வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கும் வருகைக்கும் ஏற்றவாறு நவீன கழிப்பிட வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது.
திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் தேவையினடிப்படையில் அவர்கள் தங்குவதற்கு வசதியாக திருக்கோயில்களில் தேவையான அளவில் குடில்கள், தங்கும் அறைகள், துயில் கூடங்கள், பொருட்கள் பாதுகாப்பு அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருக்கோயில் களைத் தூய்மையாகப் பராமரிப் பதற்குத் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருக்கோயில்களுக்குச் சொந்தமான உலோகத்திருமேனிகள், ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாத்திடகளவு எச்சரிக்கைமணி, கோள்சொல் கடிகாரம், தொட்டிப் பூட்டு, இரும்பு வாயிற்கதவுகள், கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகள் ஆகியன பொருத்துதல், இரவுக் காவலர்கள்நியமனம், திருக்கோயில் பாதுகாப்புப் படையினர் நியமனம் ஆகியன திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற உலோகத் திருமேனிகளைப் பாதுகாக்கும் பொருட்டு கீழ்கண்ட திருக்கோயில்களில் உலோகத்திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
திருக்கோயில்களில் உள்ள உலோகத்திருமேனிகள், பொன், வெள்ளி ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உண்டியல்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக `திருக்கோயில் பாதுகாப்புப்படை` என்ற ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதில் 1000 இரண்டாம் நிலைக்காவலர்கள், 3000 முன்னாள் படைவீரர்கள் ஆகியோரை நியமனம் செய்வதற்கு அரசு அனுமதி அளித்தது. 2005-2006-ஆம் ஆண்டுகளில் 1000 இரண்டாம் நிலைக் காவலர்களும் 2751 முன்னாள் படைவீரர்களும் பாதுகாப்புப்படையில் பணிபுரிந்தனர். கடந்த 2006-2011-ஆம் ஆண்டுகளில் திருக்கோயில் பாதுகாப்பில் போதிய ஆர்வம் செலுத்தாததால் இந்த எண்ணிக்கை 717 இரண்டாம் நிலைக் காவலர்களும் 1806 முன்னாள் படைவீரர்களும் ஆக குறைந்துள்ளது. இந்த பிரிவில் பணியாளர்கள் குறைபாட்டினை ஈடுசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு செய்வதை நெறிப்படுத்து வதற்கும் ஊக்குவிப்பதற்கும் `போற்றி` (அர்ச்சனை) நூல்கள் பிரசுரிக்கப் பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் தெய்வச் சேக்கிழார் பிறந்த இடமான சென்னை, குன்றத்தூரில் சேக்கிழார் திருநட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் சேக்கிழார் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக திருக்கோயில் உபரிநிதியிலிருந்து ரூ.5 கோடி மூலநிதி ஏற்படுத்தி அதன் வட்டியிலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலிலும் ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்களுக்கு பன்னிரு திருமுறை விழாவும், சேக்கிழார் விழாவும் கொண்டாடப்படுகின்றன.
சிறந்த சமய அருளாளரான திருஞான சம்பந்தரைப் போற்றும் வகையில் திருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் திருஞான சம்பந்தர் இசை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதற்கான செலவு ஆணையரின் பொதுநல நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு விசுவநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் தமிழ் மூதாட்டி ஔவையார் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் சதய நட்சத்திரத் தன்று ஔவையார் விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ் ஞானப் பாடல்களை உலகிற்கு அருளிய தாயுமானவ அடிகளைப் போற்றும் வகையில் இத்துறை சார்பாக தாயுமானவர் விழா திருச்சிராப்பள்ளி, மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் இரண்டாம் நாளன்று சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்கோயிலில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.
அருளாளர் அருணகிரிநாதருக்கு திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாதம், `கேட்டை` நட்சத்திரத்தன்று `முக்திப்பேறுவிழா` ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான அருட்திரு கோச்செங்கட்சோழ நாயனார் அவதரித்த திருநாளான மாசி மாதத்தில், சதய நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் `கோச்செங்கட்சோழ நாயனார் விழா` திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் கொண்டாடப்படுகிறது.
பன்னிரு ஆழ்வார்களுக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆழ்வார்கள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தேவாரம், திருவாசகம் மற்றும் பிரபந்தங்கள் ஆகிய திருமுறைகளை அருளியநாயன்மார்கள்மற்றும் ஆழ்வார்கள் பிறந்த நாள் அல்லது முக்தி அடைந்த நாளன்று அவர்களை கௌரவிக்கும் வகையில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
திருக்கோயில்களின் தொன்மை, வரலாறு, கட்டடக்கலை, கல்வெட்டுச் செய்திகள், வழிபாட்டுச் சிறப்புகள் ஆகியவற்றை மக்கள் அறியும் வண்ணம் தலவரலாறு நூல்களும், திருக்கோயிலையும் திருக்கோயில் அமைந்துள்ள ஊரையும் உள்ளடக்கிய தலபுராண நூல்களும் வெளியிடப்படுகின்றன. மேலும் சிறு திருக்கோயில்களுக்கும் அவற்றின் வழிபாட்டுச் சிறப்புகளை அறிந்து கொள்ள ஏதுவாக தகவல் அட்டைகள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. தலவரலாறு மற்றும் தலபுராண நூல்கள் தேவையடிப்படையில் பதிப்பு செய்தும், புதுப்பித்தும் வெளியிடப்படுகின்றன.
பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள திருக்கோயில்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, முக்கியமானநகரங்களில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ளதிருக்கோயில்கள்தொடர்பானவிவரங்களைச்சேகரித்துஅனைத்து மாவட்டங்களுக்கான பயணியர் வழிகாட்டிக் கையேடுகள் தேவைக்கேற்ப பிரசுரிக்கப்படுகின்றன. பக்தர்கள்மற்றும்சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக ஏற்கனவே உள்ள பயணியர் கையேடுகள் மீண்டும் பிரசுரிக்கவும் புதிய பயணியர் கையேடுகள் பிரசுரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆகம சாத்திர நூல்களும், சிற்பசாத்திர நூல்களும் தமிழர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில் உத்ரகாமிக ஆகமம் மற்றும் குமாரதந்திரம் ஆகிய நூல்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. மேலும் `இந்து மத இணைப்பு விளக்கம்`, `சைவமும் வைணவமும்`, `ஆலய நிர்மாணபிம்பலட்சண சிற்பநூல்` போன்ற தமிழ் நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்டநூல்கள் மறு பதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் முக்கிய திருக்கோயில்களில் சுதந்திரத் திருநாள், பேரறிஞர் அண்ணா நினைவுநாள் ஆகிய நாட்களில் அனைத்துச் சமுதாய மக்களும் ஏற்றத் தாழ்வின்றி பங்கு பெறும் வகையில், சிறப்பு வழிபாடும் பொது விருந்தும் நடத்தப்படுகின்றன.
திருக்கோயில்களுக்குக் காணிக்கையாக வரப்பெறும் கால்நடைகளைப் பராமரிக்க ஒருங்கிணைந்த கோசாலைகள் பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் ஆகிய நான்கு இடங்களில் உள்ளன. திருக்கோயில்களுக்கு உபயமாக பெறப்படும் உபரி கால்நடைகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும், பூசாரிகளுக்கும் விலையின்றி வழங்கப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறையால் 1958-ஆம் ஆண்டு முதல் `திருக்கோயில்` என்ற பெயரிலேயே திங்களிதழ் வெளியிடப்படுகிறது. தற்போது இந்த மாத இதழ்தலை சிறந்த எழுத்தாளர்களின் கட்டுரைகளுடன், எழில்மிகும் வண்ணங்களுடனும் வெளியிடப்படுகிறது. இவ்விதழுக்கு இணையம் வழியாகவும் சந்தாதாரராகலாம். http://www.thirukoilmagazine.tnhrce.in/payment.html