Screen Reader Access     A-AA+
Government of Tamil Nadu
Hindu Religious & Charitable Endowments Department
×
Go-Top
About US

Hindu Religious & Charitable Endowments Department


வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகில்

"மாயோன் மேய காடுறை உலகமும்; சேயோன் மேய மைவரை உலகமும்; வேந்தன் மேய தீம்புனல் உலகமும்; வருணன் மேய பெருமணல் உலகமும்…" எனத் தொல்காப்பியம் நிலங்களுக்குரிய தெய்வங்களாக வகுத்துக் காட்டுகிறது.

இதனடிப்படையில் முன்னோர் உள்ளக்கிடக்கையின் மரபுவழி தொடர்புகளாகவும், வரலாற்றுப் பெட்டகங்களாகவும் நிலைபெற்றுள்ள திருக்கோயில்கள் மற்றும் அதன் பண்பாட்டு அசைவுகளைக் காக்கும் பொருட்டு திருக்கோயில் நிர்வாக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இத்துறை ஏற்படுத்தப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இருந்தே தமிழக¡ கோயில்கள் அரசின் ஆளுகையின் கீழ் இருந்துவருகிறது.

இந்து சமயத் திருக்கோயில்களுக்குத் தொன்றுதொட்டு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் இருந்து வந்துள்ளன. கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் இருந்தே இவற்றை நிர்வாகம் செய்வதில் குறிப்பிட்ட சில சமூகச் சீர்கேடுகள் மிகுந்து காணப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அப்போது ஆட்சி செய்த மன்னர்களிடமும், கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திடமும் இது தொடர்பாக பொதுமக்கள் ஏராளமான புகார்களைக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் 1817-ல் முதல்முறையாக மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டமானது திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி முதலான அறக்கொடைகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும், தனிப்பட்டவர் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வழிவகை செய்தது. இந்த அதிகாரம் அப்போதிருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தொடங்கி ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன.

1858-ல் இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு நேரடியாக சென்றது. தங்கள் மீது இந்திய மக்களுக்கு இருந்த வெறுப்பை குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவுமான தேவை அப்போதைய பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது. இதனால், 'மத விவகாரங்களில் பிரிட்டீஷ் அரசு தலையிடாது'என்ற வாக்குறுதியை அளித்தது. இதனால் ஏற்கெனவே கோயில்களும், அவற்றின் சொத்துகளும் யார் வசம் இருந்தனவோ, அவர்கள் தங்கு தடையின்றி அவற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள்.

புகார்கள் பெரிய அளவில் வந்தாலும்கூட, சிக்கல் நிறைந்ததும் புரிந்துகொள்வதற்குசிரமமானதுமான இந்திய சமூக அமைப்பையும், அதனுடன் பின்னி பிணைந்திருந்த கோயில் விவகாரங்களையும் பிரிட்டிஷ் அரசு அதிகம் தலையிடாமல் விலகி நின்றது.அதேநேரம், கோயில்களின் உள்ளே இருக்கும் விலை மதிப்பு மிக்க தங்க நகைகள், விக்கிரகங்கள் உள்ளிட்டவை தவறாகக் கையாளுவதாகவும்,சொத்துகளை ஆக்கிரமித்திருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கொடுப்பது மட்டும் தொடர்ந்துகொண்டே இருந்தது.

1920-ல் பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்தார். இதற்காக 1922-ல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். 1925-ல் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்றார். இறுதியில் 1927-ல் 'இந்து சமய அறநிலைய வாரியம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்படி திருக்கோயில்களின் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப்பட்டது. அதைப்போலவே நிர்வாகம் சரிவர நடைபெறாத கோயிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்துசமயஅறநிலையவாரியத்தினை சீர்படுத்தும் பொருட்டு 1940-ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு அலுவலரை நியமனம் செய்தது.

இந்து சமயம் மற்றும் அறநிறுவனங்களை வாரியத்திற்கு பதிலாக அரசே நிருவகிக்கலாம் என்ற சிறப்பு அலுவலரின் பரிந்துரையில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் வாரியத்தினை ஒரு அரசு நிர்வாகமாக மாற்றி அமைத்தால் பயனுள்ளதாகும் என ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 1942-ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட அலுவல் சாரா குழு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 1951 இயற்றப்பட்டு பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்து சமய அறநிறுவனங்களின் நிர்வாகத்தினை அரசு ஏற்றது. இந்த சட்டத்தில் விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம், 22, ஜனவரி 1960, 1-ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன்படி, இந்து சமய திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டது.